சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்பு திருத்தச் சட்டத்தில், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத இருவரை சேர்க்க வேண்டும் என்ற பிரிவு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், சமூக செயல்பாட்டாளர்களும் போராட்டங்களை நடத்தியது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயற்சி பெற்ற பாஜவை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி என்பவரை புதுச்சேரி வக்பு வாரியத்தில் உறுப்பினராக நியமித்திருப்பது, ஏற்கனவே வேதனையில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனதை மேலும் புண்படுத்தும் செயலாகும்.
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக வக்பு வாரியத்திற்கு தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்காமல், வேண்டுமென்றே வாரியத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்திருந்த யூனியன் பிரதேச அரசு, தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் உள்நோக்கத்துடன் அவசர அவசரமாக இந்த நியமனங்களை மேற்கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. வக்பு வாரியம் முறையாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
