வல்லம்: விஜய்யை பின் தொடர்ந்து வந்ததால் ஏற்பட்ட விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை தவெகவினர் எட்டிக்கூட பார்க்க வில்லை என குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாச்சாமிப்பட்டியில் நேற்றுமுன்தினம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இதற்காக திருச்சிக்கு தனிவிமானத்தில் வந்த அவர், அங்கிருந்து பிரச்சார வேன் மூலமாக அய்யாச்சாமிப்பட்டிக்கு சென்றார். முன்னதாக, வரும் வழியில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர்கள் கீழக்கல்கண்டார்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்த விக்னேஷ் (19) அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த அருண் (20) ஆகியோர் விபத்தில் சிக்கினர். இதில் விக்னேஷ்க்கு தலையிலும், அருணுக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இருவரும் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு விக்னேஷ்க்கு தலையிலும், அருணுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தவெக நிர்வாகிகள் ஒருவர் கூட இதுவரை மருத்துவமனை வந்து மாணவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறவில்லை. அவர்கள் வரவேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவர்களது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
