நாகர்கோவில்: நாகர்கோவில் வலம்புரிவிளையில் குப்பைகளை குளிர்விக்கும் பணிகள் ஷிப்ட் முறையில் நடக்கின்றன. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் இருந்து நாள்தோறும் சுமார் 130 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மக்கும், மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் நுண்ணுயிர் செயலாக்க மையம் மூலம் உரமாக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தனியார் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வலம்புரிவிளை உரக்கிடங்கு, ஏற்கனவே குப்பைகளாக நிரம்பி உள்ளது. கடந்த 2020ல் கணக்கெடுப்பு படி 1 லட்சத்து 53 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் தேங்கி கிடந்தன. அடிக்கடி தீ விபத்துக்களும் நிகழ்ந்தன. இந்த குப்பைகளை அகற்றும் வகையில் வலம்புரிவிளையில் பயோமைனிங் முறையில் தரம் பிரிக்கும் பணிகள் கடந்த 2020 ல் பணிகள் தொடங்கின.
தனியார் நிறுவனம் மூலம் பணிகள் நடந்தன. இதற்காக குப்பைகளை பிரிக்க 2 இயந்திரங்கள் முதலில் ெகாண்டு வரப்பட்டன. ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு 300 டன் குப்பைகளை பிரித்து எடுக்கும் வகையில் பணிகள் நடந்தன. பின்னர் மேலும் கூடுதலாக 2 இயந்திரங்கள் வந்தன. அந்த வகையில் 4 இயந்திரங்களும் சேர்த்து தினமும் 1200 டன் குப்பைகளை பிரிக்கும் பணிகள் நடந்தன. ஆனாலும் குப்பைகளை பிரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துக்கள் பெரும் சிரமத்தை உண்டாக்கின. இதனால் அதி விரைவில் குப்பைகளை பிரிக்கும் இயந்திரங்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரூ.1.50 கோடி செலவில் அதிக விரைவு பயோ மைனிங் இயந்திரம் வாங்கப்பட்டது. இந்த இயந்திர இயக்கத்தை கடந்த செப்டம்பரில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 70 மெட்ரிக் டன் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடக்கிறது தலா 8 மணி நேரம் வீதம் 3 ஷிப்ட் முறையில் பணியாளர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் சுமார் 1600 மெட்ரிக் டன் குப்பைகள் வரை பிரிக்கப்படுகிறது.
இதன் மூலம் தற்போது வலம்புரிவிளையில் வலது புறத்தில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. குப்பைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். வலம்புரிவிளையில் வலதுபுறம் குப்பைகள் அகற்றப்பட்ட இடங்களில், பாதை உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இடதுபுறம் பகுதியில் உள்ள குப்பைகளை எளிதில் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து அகற்றிட முடியும். இதற்கிடையே வலம்புரிவிளையில் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த 2025 ல் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடினர். 1 வாரத்துக்கு மேல் போராடி தீ அணைக்கப்பட்டது.
வெளி மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து சம்பவத்தை ெதாடர்ந்து, வலம்புரிவிளையில் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தற்போது தனியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து, அதன் மூலம் குப்பைகளை குளிர்விக்கும் பணிகள் நடந்து வருகின்றன. காலை, மதியம், இரவு என 3 ஷிப்ட் முறையில் குப்பைகளை தண்ணீர பீய்ச்சி அடிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது கோடை காலமும் தொடங்க உள்ளதால், குப்பைகளை குளிர்விக்கும் வகையில் நீர் பாய்ச்சுவதால், அடிப்பகுதியில் தீ பிடித்தால் தான் கொளுந்துவிட்டு எரியாது.
தினமும் 3 வேளை பணியாளர்கள் சென்று பார்ப்பதால், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதை கவனித்து அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர்.
