×

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடல் பகுதிகளில் மட்டும் 23 ஆயிரம் இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு!!

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடல் பகுதிகளில் மட்டும் 23 ஆயிரம் இந்திய மாலுமிகள் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஈரானின் அறிவிப்பை மீறி, ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற எண்ணெய் டேங்கர்கள் மீது ஈரான் புரட்சிகர படை தாக்குதல் நடத்தியது.

அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பலுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்துள்ளார். இந்தப் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தாமல், வளைகுடா கடல்பகுதிகளில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், மத்திய அரசுக்குச் சொந்தமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 7 கப்பல்கள் உள்பட இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 35 கப்பல்கள் வளைகுடா பகுதிகளில் சிக்கியுள்ளன. இந்த கப்பல்களில் மட்டும் 1,074 இந்தியப் பணியாளர்கள் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் கப்பல்களில் 23,000 இந்திய மாலுமிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை இந்திய கப்பல்களின் நிலை குறித்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும், மிகவும் ஆபத்தான செங்கடல் வழியை இந்திய கப்பல்கள் ஏதும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Strait of Hormuz ,Iran ,Gulf Sea ,Delhi ,United ,States ,Israel ,
× RELATED சமஸ்கிருதத்தை வளர்க்கவே அக்கறை; தமிழ்,...