×

சமஸ்கிருதத்தை வளர்க்கவே அக்கறை; தமிழ், தமிழ் என்று மக்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு: துணை முதல்வர் உதயநிதி காட்டம்

 

தஞ்சை: தஞ்சை கரந்தை தமிழ் சங்கத்தில் கலைஞர் மற்றும் தமிழ் சங்க முன்னாள் தலைவர் ராமநாதன் சிலைகள் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்து பேசியது: தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாக பாடப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க இந்த கரந்தை தமிழ்ச் சங்கத்தில் தான். அதன் பிறகு 1970ல் கலைஞர் இந்த பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல் என்பதை அறிவித்து, அதை பாடும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என அரசாணை வெளியிட்டார். தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என 1920லேயே முதன்முதலில் தீர்மானம் போட்டது இந்த சங்கத்தில் தான்.

அதற்கு செயல் வடிவம் கொடுத்த பெருமைக்குரியவர் கலைஞர். அனைத்தையும் விட மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் 1937ல் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிக்கும்போது அதை எதிர்த்துத் தீர்மானம் போட்டதும் கரந்தை தமிழ்ச் சங்கம்தான். இந்தி திணிப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிரைப் பங்கேற்க வைத்தது கரந்தையை சேர்ந்த அன்னை தர்மாம்பாள். ​அப்போது தொடங்கிய இந்தித் திணிப்பு முயற்சி இன்றும் தொடர்கிறது. நேற்றும் திருச்சி ரயில்வே அலுவலக வாயிலில் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதற்கு முதல் எதிர்ப்பு குரல் எழுப்பியவர் முதல்வர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

கல்வி நிதி ரூ.3500 கோடியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. புதிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் ரூ.3500 கோடி நிதியைக் கொடுப்போம் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. ​ரூ.3,500 கோடி இல்ல, 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் உன்னுடைய இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எப்போதும் இடம் கிடையாது என்று முதல்வர் கூறி விட்டார். எனவே அந்த உறுதியை முதலமைச்சருக்கு கொடுத்த கலைஞருக்கு இங்கு சிலை திறந்து இருக்கிறோம். ​அதே மாதிரி மிசா சட்டம் வந்த காலத்தில் திமுக பொதுக்குழு நடத்த தமிழ்நாட்டில் யாரும் இடம் தரவில்லை. அப்போது பொதுக்குழு நடத்த இடம் கொடுத்தது, கலைஞருக்குத் துணையாக நின்றதும் இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான். அதனாலதான் இந்தச் சங்கத்துடைய வாழ்நாள் உறுப்பினராக கலைஞர் தன்னை இணைத்து கொண்டார்.

தமிழின் சிறந்த நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம் தமிழில் கொண்டு வரும் முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. ​ஆனால் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டும்தான் அக்கறை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.147 கோடி. ​தமிழ் தமிழ்ன்னு சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. அந்த ஏமாற்று வேலைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Udayanidhi Kadam ,Deputy ,INAUGURATION CEREMONY ,STATUES OF RAMANTHAN, ARTIST AND ,FORMER ,PRESIDENT ,TAMIL ASSOCIATION ,THANJAI KARANTAI TAMIL SOCIETY ,Udayaniti Stalin ,
× RELATED மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும்...