×

அய்யா வைகுண்டர் அவதார தின விழா; சாமிதோப்பில் பக்தர்கள் குவிந்தனர்: நாகர்கோவிலில் இருந்து பிரமாண்ட ஊர்வலம்

 

 

நாகர்கோவில்: அய்யா வைகுண்டர் அவதார தின விழாவையொட்டி, சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர். நாகர்கோவிலில் இருந்து அய்யா வழி பக்தர்கள், ஊர்வலமும் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (4ம்தேதி) அய்யா அவதார தின விழா ஆகும். இதையொட்டி குமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் இன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சாமித்தோப்பில் உள்ள முத்திரி கிணற்றில் நீராடிய பக்தர்கள், பின்னர் அய்யா வைகுண்டர் தலைமை பதிக்குள் சென்று வழிபாடு செய்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதையொட்டி கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அய்யா வைகுண்டர் பதியில், அவதார தின விழா நடந்தது. இதையொட்டி அன்னதானமும் நடைபெற்றது.

முன்னதாக, அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி திருச்செந்தூர் செந்தூர் அவதார பதியில் இருந்து குமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைபதி நோக்கி வாகன ஊர்வலம் நேற்று (3ம்தேதி) காலை தொடங்கியது. இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தது.
இதே போல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் திருவனந்தபுரம், பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடலை வந்தடைந்தது. பின்னர் நாகராஜா கோயில் மண்டபத்தில் மாசி மாநாடு நடந்தது. இதில் அய்யா வழி பக்தர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் இன்று (4ம்தேதி) அய்யா அவதார தின விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு, நாகராஜா கோயில் திடலில் இருந்து அய்யா அவதார தின விழா ஊர்வலம் சாமித்தோப்புக்கு புறப்பட்டது.

கோட்டார், கரியமாணிக்கபுரம், வடக்கு தாமரைக்குளம் வழியாக இந்த ஊர்வலம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைபதியை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகில திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். காவி உடை அணிந்தும், காவி கொடி ஏந்தியும் அய்யா சிவ… சிவ…, அரகர சிவ…சிவ… என்ற கோஷத்தை முழங்கியபடி தலையில் சந்தன குடம் சுமந்தும் பக்தர்கள் சென்றனர். வழி நெடுக பக்தர்களுக்கு குளிர்பானம், உணவு, இனிப்பு வகைகளை பக்தர்கள் வழங்கினர். அய்யா அவதார தின விழாவையொட்டி இன்று (4ம்தேதி) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

 

Tags : Ayya Vaikundar Avars Day ,Samitop ,Nagarkovil ,Nagarko ,Ayya Vaigunder ,Ayatra Day ,Nagarkovo ,Ayya Vikunder Avatar Day ,
× RELATED வெயில் தாக்கம் நாளுக்கு நாள்...