சென்னை: இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே போர் நடந்து வரும் நிலையில், துபாயில் இருந்து 217 பேர் விமானத்தில் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் காத்திருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டதால் கடந்த 3 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டது. துபாய், பக்ரைன், அபுதாபி, சார்ஜா, கத்தார். குவைத், மஸ்கட் போன்ற நாடுகளில் இருந்து விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை விமான நிலையதில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே துபாய் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், ஒரு சில விமானங்களை இயக்க துபாய் நாடு அனுமதி அளித்தது. அதன்படி, துபாய் நாட்டின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் சில விமானங்களை இயக்க முன் வந்தது. நேற்று முன்தினம் இரவு துபாய் விமான நிலையத்தில் இருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 217 பயணிகளுடன், சென்னைக்கு புறப்பட்டது. 3 நாட்களாக துபாயில் சிக்கித் தவித்த குழந்தைகள், பெண்களுடன் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அந்த பயணிகள் குடியுரிமை, சுங்க சோதனை முடித்துவிட்டு, அதிகாலை 3 மணியளவில் வெளியே வந்தனர். அப்போது, விமான நிலையத்தின் வெளியே காத்திருந்த குடும்பத்தினர், உறவினர்கள் விமானத்தில் வந்தவர்களை கட்டி தழுவி, கண்ணீர் மல்க உற்சாகமாக வரவேற்றனர். துபாயில் கணவருடன் தங்கி இருந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி என்பவர் கூறுகையில், ‘துபாயில் பாதுகாப்பாக இருந்தோம்’. ஆனால் கடந்த மூன்று தினங்களாக ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தோம்.
இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு ஒரு வழியாக சென்னைக்கு வந்தது, மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார். அவரும் அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிடுவார். மூன்று நாட்களாக இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தோம். துபாய் விமான நிலையத்தில் எந்த பகுதியில் தாக்குதல் நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பதற்றமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்தோம். விமானத்தில் ஏறி அமர்ந்ததும், நிம்மதி அடைந்தோம்’ என்றார்.
துபாய்க்கு சுற்றுலா சென்று சென்னை திரும்பிய கோயம்பேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், ‘துபாய்க்கு குடும்பத்துடன் கடந்த செய்வாய்க்கிழமை சுற்றுலா சென்றோம். சனிக்கிழமை மாலை, துபாய் விமான நிலையத்திற்கு வந்தபோது, போர் காரணமாக விமானம் ரத்து என்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம். அதன்பின்பு துபாய் விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று தங்கினோம். சனிக்கிழமை இரவு முழுவதும், போர் விமானங்கள் பறப்பதும், ஆங்காங்கே குண்டுகள் ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம் கேட்டது.
இதனால் நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்தோம். நாங்கள் சென்னை திரும்ப, ஒரு வாரம் ஆகும் என்று நினைத்தோம். எனவே துபாயில் இருந்து மஸ்கட் செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால் நேற்று இரவே, எமிரேட்ஸ் விமானம் சென்னைக்கு புறப்பாடுவதாக அறிவிப்பு வந்ததும், நாங்கள் சென்னைக்கு வந்து விட்டோம். விமானத்தில் எங்களை நன்றாக கவனித்து கொண்டனர். சுற்றுலா சென்ற நாங்கள், போர் சூழலில் சிக்கி, மாட்டிக் கொண்டோம் என்று பயமாக இருந்தது. ஆனால் ஒரு வழியாக நாங்கள் மீண்டும் பத்திரமாக சென்னைக்கு திரும்பி விட்டோம், என்றார்.
லண்டனில் இருந்து துபாய் வழியாக சென்னை திரும்பிய தேவகுமார் கூறுகையில், ‘நான் பிப்ரவரி 28ம் தேதி இரவு துபாய் விமான நிலையம் வந்தேன். நான் சென்னை வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போது, நாங்கள் பல ஆயிரம் பேர் இருந்தோம். எங்கள் அனைவருக்கும் துபாய் அரசு ஓட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ததோடு, உணவு வசதிகளையும் செய்து தந்தனர்.
ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கும் சத்தம், போர் விமானங்கள் பறக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. ஆனாலும் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம். இந்திய அரசும் துபாய் அரசோடு தொடர்பு கொண்டு, எங்கள் பாதுகாப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் நேற்று இரவு எங்களை தொடர்பு கொண்டு, மீண்டும் விமான நிலையத்திற்கு அழைத்து வந்து, விமானம் மூலம் பத்திரமாக எங்களை சென்னையில் கொண்டு வந்து சேர்த்தனர், என்றார்.
சவுதி அரேபியாவில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்த முருகன் என்பவர் கூறுகையில், ‘சவுதி அரேபியாவில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். சனிக்கிழமை இரவு நான் துபாய் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டேன். ஆனால் துபாய் போலீசார் மற்றும் அதிகாரிகள் எங்களை மிகவும் பத்திரமாக பாதுகாத்தனர். சுமார் 20,000 பேர் இருந்தோம். அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி ஓட்டல்களில் தங்க வைத்தனர்.
அவ்வப்போது எச்சரிக்கை சைரன் அலாரம் அடிப்பது எங்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் குழந்தைகள், பெண்கள் கதறி அழுதனர். ஆனால் துபாய் அதிகாரிகள் எங்களை தைரியப்படுத்தினர். அதேபோல் இந்திய அரசும், துபாய் அரசோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு, எங்களை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் பேரில் நாங்கள் இப்போது பத்திரமாக முதல் விமானத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்’ என்றார்.
