×

சத்தி, பு.புளியம்பட்டியில் நேந்திரன் விலை கடும் வீழ்ச்சி

சத்தியமங்கலம், பிப்.10: நேந்திரன் ரக வாழை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.10க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் நேந்திரன் ரக வாழை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ரக வாழைத்தார்களை வியாபாரிகள் தோட்டத்திற்கே சென்று விலை பேசி அறுவடை செய்து கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

நேந்திரன் வாழைக்காய் கேரளாவில் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது நேந்திரன் ரக வாழைக்காய் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்து நேற்று சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. இதனால், கடும் நஷ்டத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறியதாவது: சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் சாதா நேந்திரன் மற்றும் குவிண்டால் நேந்திரன் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. சாதா நேந்திரன் வாழை பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் வரை செலவாகிறது. குவிண்டால் நேந்திரன் பயிரிட ரூ.1.50 லட்சம் செலவாகிறது. இந்தாண்டு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து பயிரிடப்பட்டது.

ஆனால், தற்போது அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய் கிலோ ரூ.10க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினர். இதுகுறித்து கேரள வியாபாரிகளிடம் கேட்டபோது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் நேந்திரன் ரக வாழைகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதால் விளைச்சல் அதிகரித்ததோடு கேரளாவிற்கு நேந்திரன் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், கடந்த ஒரு மாததிற்கு முன்பு கிலோ ரூ.20 முதல் 25 வரை விலை போன நிலையில் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை போவதாக தெரிவித்தனர். இதன்காரணமாக, நேந்திரன் வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்த விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் சோகத்துடன் திரும்பி சென்றனர். நேந்திரன் ரக வாழைத்தார்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Satti ,
× RELATED சத்தி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ...