×

தொண்டாமுத்தூர் அருகே குடிபோதையில் தாய், தந்தையை கொன்ற மகன் கைது

தொண்டாமுத்தூர், பிப்.10:  கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (75). இவரது மனைவி துளசி (70). இருவரும் தங்களது வயதான காலத்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்து சமாளித்து வந்தனர். இவர்களுக்கு சாவித்திரி (47) இந்திராணி (45), நாகமணி (37), திலகா (31) என 4 மகள்களும், கார்த்திகேயன் (30) என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி அனைவரும் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். கார்த்திகேயனுக்கு புவனேஸ்வரி (27) என்ற மனைவியும், நிரஞ்சன் (5) என்ற மகனும் உள்ளனர். புவனேஸ்வரி, கணவனை பிரிந்து மகனுடன் மதுக்கரை காளியாபுரத்தில் வசித்து வருகிறார்.

கார்த்திகேயன் பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவி, மகன் பிரிந்ததால் விரக்தியில் இருந்த கார்த்திகேயன் தினமும் மது குடிப்பது,  மது குடிக்க மீண்டும் பணம் கேட்பது என பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு அடித்தும், உதைத்தும் வந்தார்.தொடர்ந்து இதுபோல் நடந்ததால் பெற்றோர் ஆலாந்துறை போலீசில் அடிக்கடி புகார் கொடுத்து வந்தனர். ஒவ்வொரு முறையும் போலீசார் கார்த்திகேயனை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த அவர், கடந்த 6ம் தேதி இரவு வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்து தந்தையிடமும், தாயிடமும் தகராறி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மறுநாள் காலை சுந்தரம், துளசி இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, அரிவாளால் கழுத்து, கைகளில் வெட்டப்பட்ட நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தனர். கார்த்திகேயன் திடீரென மாயமானார். அவரை தேடி வந்த நிலையில் ஆலாந்துறை போலீசார் கார்த்திகேயனை நரசீபுரத்தில் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குடிப்பதற்கு பணம் தராததால் குடிபோதையில் பெற்றோரை அரிவாளால் வெட்டிக்கொன்றது தெரியவந்தது.

Tags : Thondamuthur ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!