×

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாம்பூரில் ஜெபக்கூடம் திறப்பு

சூலூர், பிப்.10: நீலாம்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெபக்கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது.  நீலாம்பூர் பகுதியில் ஒரு பிரிவினரின் ஜெபக்கூடம் நடந்து வந்தது. இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஜெபக்கூடம் நடத்துவது தொடர்பாக அந்த பிரிவினர் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு நேற்று காலை திறப்பு விழா நடப்பதாகவும், அதில், அமைச்சர் கலந்து கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மற்ெறாரு பிரிவினர், புதிய கட்டிடம் திறக்கக் கூடாது. விழாவில், அமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது. மீறி கலந்து கொண்டால் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவலை பரப்பினர். இதனால், ஜெபக்கூடம் பகுதியில் சூலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேற்படி விவகாரம் தொடர்பாக, இந்து முண்ணனி மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம், நிர்வாகிகள் ஜெய்கிந்த் முருகேசன், பைராகி கமல்ராஜ், கொமதேக சிவசாமி, பாஜ கலங்கல் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் நீதிமன்ற உத்தரவு குறித்த தகவலை போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Prayer hall ,Nilambur ,
× RELATED முதுமலைக்கு இடம் பெயர்ந்துள்ள கேரள காட்டு யானைகள் கூட்டம்