×

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் : துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தாயகம் திரும்பினார்!!

பெங்களூரு : ஈரான் – இஸ்ரேல் இடையேயான போரின்போது துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ தாக்குதலை அடுத்து, அமெரிக்காவின் நட்பு நாடான துபாய் மீது ஈரான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றங்களால் மத்திய கிழக்கில் விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,துபாயிலிருந்து, ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்க பர்மிங்காம் செல்ல, இந்தியாவை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து விமான நிலையத்தில் காத்திருந்தார்.

ஆனால், ஈரானில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதால் துபாயில் இருந்து விமானங்கள் புறப்படவில்லை. 8 மணி நேரம் காத்திருந்தும் விமானங்கள் செல்லாததால், விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு சிந்து தள்ளப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘துபாயில் இருந்து விமானங்கள் புறப்படாததால் 8 மணி நேரமாக விமான நிலையத்திலேயே காத்திருக்கிறோம். சில மணி நேரங்கள் முன்பு, விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது. எனது பயிற்சியாளர் அந்த இடத்துக்கு சற்று தொலைவில் இருந்துள்ளார். புகை மண்டலமாக எழுந்த நிலையில் அங்கிருந்து தப்பி பாதுகாப்பான இடத்துக்கு அவர் வந்தார். அந்த நொடிகள் மிகவும் பயங்கரமானதாக இருந்தன. தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு உதவிய துபாய் விமான நிலைய அதிகாரிகளுக்கும், இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,’ என கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையேயான போரின்போது துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பாதுகாப்பாக பெங்களூரு வந்தடைந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பக்கத்தில், ” கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. துபாயில் இருந்து பாதுகாப்பாக பெங்களூரு வந்தடைந்தேன். கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Iran ,Israel ,Dubai ,SINDH ,HOMELAND ,Bengaluru ,-Israel war ,V. Sindhu ,India ,US ,United States ,
× RELATED ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல...