×

குளத்தில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து பிணவறை முன் போராட்டம்: குமரி மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு

நாகர்கோவில், பிப்.9:   திருவட்டார் அருகே கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து, பிணவறை முன் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த மேக்காமண்டபம் அருகே உள்ள புனத்துவிளை உம்மன்கோடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேரி ஜெய அமுதா (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வின்சென்ட், கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் மதியம் மேரி ஜெய அமுதா, வெட்டுக்காட்டுவிளை ரேஷன் கடைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். புளையன்விளை நல்லபிள்ளை பெத்தான்குளம் கரையில் நடந்து வந்த போது, முளகுமூடு வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த மெர்லின்ராஜ்(35) என்பவர் மேரிஜெய அமுதா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

செயினை விடாமல் அவர் போராடியதால், ஆத்திரமடைந்த மெர்லின்ராஜ் மேரிஜெய அமுதாவை குளத்திற்குள் தள்ளினார். இதில் நீரில் மூழ்கி மேரி ெஜய அமுதா உயிருக்கு போராடினார். அவரை கதற, கதற குளத்துக்குள் மூழ்கடித்து கொன்று விட்டு செயினை பறித்து விட்டு மெர்லின்ராஜ் தப்பினார். இந்த சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், மெர்லின்ராஜை பிடிக்க முயன்றனர். பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த  மெர்லின்ராஜை, பொதுமக்கள் பிடித்து திருவட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் தாக்கியதால், தனக்கு காயங்கள் இருப்பதாக கூறியதால், அவர் நேற்று முன் தினம் இரவு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மேரி ெஜய அமுதா உடல், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து, உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். கொலை செய்யப்பட்ட மேரி ஜெய அமுதா குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து மருத்துவக்கல்லூரி பிணவறை முன் போலீசார் குவிக்கப்பட்டனர். டி.எஸ்.பி. வேணுகோபால் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அரசியல் கட்சியினரும் வந்தனர். கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் மாலை 3.45 க்கு உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன் பின்னர் மேரி ஜெய அமுதா உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

மெர்லின் ராஜ் முன்னாள் ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் பணியில் இருந்த போது ஒழுங்கீனமற்ற  முறையில் நடந்துக் ெகாண்டதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றப்பட்டார்.  இவர் மீது திருவட்டார், தக்கலை உள்ளிட்ட காவல்நிலையங்களில் அடிதடி, மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸ் ரவுடி பட்டியலிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இழப்பீடு கேட்டு கணவர் கலெக்டரிடம் மனு'
இந்த நிலையில் வின்சென்ட், மனோதங்கராஜ் எம்.எல்.ஏ தலைமையில் மகள்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மனைவி ரேஷன் பொருட்கள் வாங்க முளகுமூடு பகுதியில் உள்ள ரேஷன்கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் ராணுவ பணியில் இருந்து தவறான நடத்தையால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவவீரர் மெர்லின் ராஜ் எனது மனைவியின் செயினை பறித்துவிட்டு மானபங்கப்படுத்தி காலை பிடித்து தரையில் அடித்து தண்ணீரில் தள்ளி, தலையை பிடித்து தண்ணீருக்குள் அழுத்தி கொன்றுள்ளான்.

அப்போது இதனை தடுக்க முயன்ற தேவதாஸ் என்பவரை கீழே தள்ளிவிட்டான். இந்த சத்தத்தை கேட்டு அங்கு வந்து அவனை பிடிக்க முயன்ற பேபி மற்றும் இந்திரா ஆகியோரையும் தாக்கியுள்ளார். எனது மனைவியை கொன்றவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. நான் நோய்வாய்ப்பட்டவன். எனக்கும் எனது இரு பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பும், பிள்ளைகளுக்கு தேவையான படிப்பு செலவும், அவர்களுக்கு தகுந்த வேலை மற்றும் இழபீட்டு நிவாரணம் வழங்க வேண்டும். பிள்ளைகளின் திருமண செலவையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : mortuary ,pool ,Kumari Medical College ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்