×

அம்மாபேட்டை பள்ளியூர் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் மேய விடப்பட்டுள்ள வாத்துகள்

*இயற்கை உரம் கிடைக்கும்

தஞ்சாவூர் : அம்மாபேட்டை அருகே பள்ளியூர் பகுதியில் சம்பா அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இயற்கை உரத்திற்காக வாத்து மேய்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை, சாலியமங்கலம், மாரியம்மன் கோவில், கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பெரும்பாலான வயல்களில் அறுவடை பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன.

அறுவடை முடிந்து வயல்கள் தரிசாக இருப்பதால் பள்ளியூர் பகுதியில் உள்ள வயல்களில் ஆயிரக்கணக்கான வாத்துகள் மேயவிடப்பட்டுள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக வாத்து இறைச்சிக்கு பெரிய அளவில் கிராக்கி இல்லை. ஆனால் வாத்து முட்டைகள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன.

குறிப்பாக கேரளாவில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. வாத்துகளுக்கு ஒரே இடத்தில் வைத்து தீவனம் இடுவது என்பது பெரிய அளவில் செலவை ஏற்படுத்தும். அறுவடை முடிந்த வயல்களில் சிதறிய நெல்மணிகள், புழுக்கள், பூச்சிகள் வாத்துக்களுக்கு நல்ல இரையாக அமையும். இதன் காரணமாக வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய்ச்சலுக்காக தஞ்சை மாவட்டத்துக்கு வந்துள்ளன.

குறிப்பாக அரியலூர், ராமநாதபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான வாத்துகளுடன் மேய்ச்சலுக்காக வந்துள்ளனர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே பள்ளியூர் பகுதியில் அறுவடை முடிந்த வயல்கள், தரிசாக கிடக்கும் நிலங்கள், நாற்றங்கால் தயார் செய்யும் வயல்களில் வாத்துக்களை மேய விட்டுள்ளனர். இதனால் வயல்களுக்கு இயற்கை உரம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வாத்து மேய்ச்சலுக்காக வந்திருந்த தொழிலாளி கூறியதாவது:

முட்டை வியாபாரத்துக்காக மட்டும் தான் நாங்கள் வாத்து வளர்க்கிறோம். இரண்டரை வயதான பிறகு வாத்துகள் முட்டை இடுவது குறைந்து விடும். அந்த வாத்துகளை இறைச்சிக்காக விற்பனை செய்து விடுவோம். ஆயிரக்கணக்கில் வாத்துகள் வளர்த்தால் தான் முட்டைகள் அதிகம் கிடைத்து லாபம் வரும். ஒரே இடத்தில் வைத்து வாத்துகளை வளர்த்து அதற்கு தீவனம் போடுவது என்பது முடியாத காரியம். செலவும் மிக அதிகம்.

அதனால் ஊர் ஊராக சென்று அறுவடை முடிந்த நெல்வயல்கள், தரிசாக்கிடக்கும் வயல்களில், நீர் நிலைகளில் வாத்துகளை மேய்க்கிறோம். இந்த நிலத்தில் வாத்துக்கு தேவையான தண்ணீர், நெல், பூச்சிகள் என அனைத்தும் இருக்கும்.

வாத்துகள் மேய்வதால் அதன் எச்சங்கள் வயலுக்கு இயற்கை உரமாக அமையும் நாங்களும் குடும்பத்துடன் வந்து இங்கேயே கூடாரம் அமைத்து தங்கி வாத்துகளை மேய்ப்போம். இங்கு நடவுப்பணிகளை மேற்கொண்ட பின்னர் வேறு ஊர்களுக்கு செல்வோம்.

மேலும் வாத்து முட்டைகளை வியாபாரிகள் நேரிடையாக வந்து வாங்கி செல்கிறார்கள். நாங்களும் கடைகளுக்கு சென்று விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அறுவடை செய்யப்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை சாகுபடி பணிகள் முழுமையாக தொடங்கி உள்ளது.

Tags : Palliyur ,Ammapettai ,Thanjavur ,Thanjavur district ,
× RELATED விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது!!