×

தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சி -மோடி; அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி: மதுரை தேஜ பிரசார கூட்டத்தில் நீயா, நானா? சண்டை

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை, பாமக சார்பில் அன்புமணி, அமமுக சார்பில் டிடிவி.தினகரன், தமாகா ஜி.கே.வாசன், ஐஜேகே பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள் எல்லாம் இணைந்திருக்கின்றன. தேர்தல் நேரத்தில் ஒன்றாக இணைந்து தேனீக்கள், எறும்புகளை போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அனைவரும் உழைக்க வேண்டும். நம்முடைய கூட்டணி நடைபெற உள்ள தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.

தென்மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. முதல் தேர்தலை எம்ஜிஆர் சந்தித்ததும் தென் மாவட்டத்தில் தான். முதன்முதலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் தான், மக்கள் வெற்றியை கொடுத்தனர். அதேபோல், வரும் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க தென்மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள். ஜெயலலிதாக முதல்வராக இருந்தபோது தென் மாவட்ட மக்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர வேண்டுமென கேட்டார். அதையும் ஒன்றிய அரசு கொடுத்து அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு பேசினார்.

பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது: நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது நம் மதுரை மண். தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர நம் அரசுதான் அவசர சட்டம் பிறப்பித்தது. செங்கோலுக்கு நாடாளுமன்றத்தில் தனி இடம் தந்து நாம்தான் மரியாதை அளித்தோம்.

அண்மையில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று முக்கியத்துவமான ஒப்பந்தத்தை நிறைவு செய்தோம். 28 முன்னேறிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டிற்கு இதனால் என்ன ஆதாயம் என்பதில் கவனம் செலுத்த உள்ளேன். இது இளைஞர், பணியாளர், விவசாய தொழில் முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு. ஜவுளி, மின்னணு, கடல்சார் உணவு ஏற்றுமதியாளர், ஆயிரக்கணக்கான சிறு குறு வணிகர்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பும், ஆர்டர்களும் கிடைக்கும், விவசாயி, மீனவர்களுக்கு சிறப்பு விலை கிடைக்கும்.

பல லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவையெல்லாம் நடக்க வேண்டும் என்று சொன்னால் உங்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு அரசு இருந்தாக வேண்டும். என்டிஏ அரசால் மட்டுமே நிலையான மக்களை மையமாகக் கொண்ட அரசை தமிழ்நாட்டில் அளிக்க முடியும். வளர்ச்சியடைந்த தமிழ்நாடு, இந்தியாவை உறுதி செய்வோம். இவ்வாறு பேசினார்.

தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேசும்போது, அதிமுக ஆட்சி என பேசியுள்ள நிலையில், அதற்கு பின்னர் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் என்டிஏ கூட்டணி அரசு என்றே குறிப்பிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன், பாஜவினர் அமைச்சர் ஆவார்கள் என குறிப்பிட்டிருந்தார். அமித்ஷாவும் என்டிஏ கூட்டணி அரசு என்றே பேசி வருகிறார். பாஜ தலைவர்கள் தொடர்ந்து, கூட்டணி ஆட்சி என்று குறிப்பிட்டு வந்தாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல், அதிமுக ஆட்சி என்று எடப்பாடி பேசி வருகிறார்.

இதனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த ஆட்சிக்கு நான் ஆதரவு தருவது என குழப்பத்தில் உள்ளனர். அதே நேரம், மோடி மீண்டும் மீண்டும் அழுத்தமாக என்டிஏ ஆட்சி என்று சொன்னதால் எடப்பாடி கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில், யாருடைய ஆட்சி என்று மோடியும், எடப்பாடியும் நீயா, நானா என்ற ரீதியில் வார்த்தை போரில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மோடி வருகை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து உள்பட பல்வேறு நிலைகளிலும் தமிழ்நாட்டை பழி வாங்கும் பிரதமர் மோடியை கண்டிப்பதாக கூறி, தமிழ்ப்புலிகள் கட்சியினர், நேற்று மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டபொம்மன் சிலை அருகே திரண்டு கருப்புக்கொடியுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

Tags : NDA ,Tamil Nadu ,Modi ,Adimuka ,Edappadi ,Niya ,Nana ,Madurai Teja Prasara ,National Democratic Alliance ,Mandela, Madurai ,Union Ministers ,Piyush Goyal ,L. MURUGAN ,ADAMUGA ,SECRETARY GENERAL ,EDAPPADI PALANISAMI ,BAJA STATE ,PRESIDENT ,NAYINAR NAGENDRAN ,FORMER LEADERS ,ANNAMALAI ,TAMISHASAI ,
× RELATED ஓபிஎஸ்சுடன் வந்த சிட்டிங் எம்எல்ஏ: திமுக வசமாகும் உசிலம்பட்டி