×

சிறைக்கு ரூ.5 கோடி பேரம்; அதிமுகவில் மெகா போட்டி

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. அதேபோல், பாளையங்கோட்டை சிறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து புகழ்பெற்றது. பாளையங்கோட்டை தொகுதி ஒருகாலத்தில் சீவலப்பேரி வரை பரந்து விரிந்து காணப்பட்ட நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், நெல்லை மாநகராட்சிக்குள் 35 வார்டுகளை கொண்ட ஒரு தொகுதியாக சுருங்கிப் போயிற்று. மறுசீரமைப்புக்கு பின்னர் பாளையங்கோட்டை தொகுதியில் இதுநாள் வரை அதிமுக வென்றதே இல்லை என்ற வரலாறும் உண்டு. இருப்பினும் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அதிமுகவினர் தொடர்ந்து பாளையங்கோட்டையில் சீட் கேட்டு தலைமையை நச்சரித்து வருகின்றனர்.

அதிமுகவில் கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், பாப்புலர் முத்தையா, சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் மகபூப்ஜான், கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஜெரால்டு என பட்டியல் நீளுகிறது. கடந்த முறை கடையநல்லூர் ெதாகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட அய்யாத்துரை பாண்டியன் 3ம் இடம் பிடித்தார். அவரை பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடுமாறு எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேசியுள்ளார். அவர், ரூ.5 கோடி வரை செலவழிக்க தயார் என்றாராம்.

பாளையங்கோட்டை தொகுதியின் முக்கிய பகுதியான மேலப்பாளையத்தில் 80 சதவீதம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. நகர்ப்புற மற்றும் விரிவாக்க பகுதிகளில் பெருமளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர். சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகள் காரணமாக பாளையங்கோட்டை தொகுதி தொடர்ந்து திமுகவின் கோட்டையாகவே உள்ளது. பாளையங்கோட்டை தொகுதியில் 1977 முதல் 2016 வரை நடைபெற்ற 11 சட்டப் பேரவை தேர்தல்களில் 6 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், 2 முறை தி.மு.க. சின்னத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கின்றனர். 2021ல் இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இதனால் இந்த முறையும் திமுகவே பாளைதொகுதியில் களமிறங்கும்.

அதிமுக பாளையங்கோட்டை தொகுதியில் தொடர்ந்து பின்தங்கியே காணப்படுகிறது. கடந்த 2011ல் மட்டும் இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பழனி, கணிசமான வாக்குகளை பெற்றார். மற்றபடி அதிமுகவின் பலவீன தொகுதிகளில் ஒன்றாகவே பாளையங்கோட்டை கருதப்படுகிறது. தொடர்ந்து திமுக காட்டி வரும் வெற்றிமுகம் இம்முறையும் தொடரவே வாய்ப்புகள் உள்ளன. பலமுறை தோற்ற போதிலும் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் முட்டி மோதி வருகின்றனர்.

Tags : AIADMK ,Palayankottai ,Oxford of the South ,Seevalapperi ,Nellai Corporation… ,
× RELATED நாங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியுமா? பாஜவை மிரட்டும் கூட்டணி கட்சி