×

போர் பதற்றத்தால் விமானங்கள் ரத்து; துபாயில் சிக்கி தவிக்கும் நடிகை சோனல் சவுகான் உதவி கேட்டு பிரதமருக்கு மெசேஜ்

சென்னை: ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் கடும் மோதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாய் சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் முதல் தனது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

‘ஜன்னத்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சோனல் சவுகான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட பல முக்கிய நபர்கள், அங்குள்ள விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர். விமான நிலையத்தில் நிலவும் கடும் நெருக்கடி குறித்து சோனல் சவுகான் தனது சமூக வலைத்தளத்தில், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துக்கு உதவி கேட்டு பதிவு செய்துள்ளார்.

அதில், ‘வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் நான் துபாயில் சிக்கியுள்ளேன். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா திரும்ப வழி தெரியவில்லை. இங்குள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உணவு மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் உடனே தலையிட்டு, தங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்
புதிய தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பாக, துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில், தனது அணியினருடன் நடிகர் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ஈரான், இஸ்ரேல் போர் மூலம் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, அஜித் குமாரின் பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி கேட்டு வந்தனர். இதையடுத்து நேற்று அவரது மேலாளர் அளித்துள்ள விளக்கத்தில், ‘துபாயில் அஜித் குமார் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

ஏவுகணை சீறிப் பாய்வதை பதிவிட்ட விஷ்ணு மன்ச்சு
துபாயில் இருக்கும் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மன்ச்சு, தனது தலைக்கு மேல் பறந்த ஏவுகணையை ஒரு வீடியோவாக பதிவு செய்து, அதை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘இன்றிரவு (பிப்.28) துபாயில் எனது குடும்பத்தினருடன் இருக்கிறேன். அப்போது வானில் ஏவுகணைகள் சீறிப் பாய்வதை கண்கூடாக பார்க்க முடிந்தது. அந்த ஏவுகணைகளை இடைமறித்து தாக்குகின்றனர்.

இதுபோன்ற தாக்குதலால் ஏற்பட்ட பயங்கரமான சத்தம், இப்போதுள்ள எங்கள் துபாய் வீட்டை உலுக்கிவிட்டது. எனது மகள் அந்த சத்தத்தை கேட்டு பயந்து நடுங்கினாள். உலகம் முழுவதும் அமைதி ஏற்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். எந்த குழந்தையும் தனது வீட்டின் மேல் போர் சத்தத்தை கேட்டு வளரக்கூடாது. பொதுமக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு படைக்கு மனமார்ந்த நன்றி. இதுபோன்ற தருணங்கள்தான், வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. மன வலிமைக்கும், அமைதிக்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஹரஹர மகாதேவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sonal Chauhan ,Dubai ,Chennai ,Iran ,Israel ,Dubai International Airport ,
× RELATED ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி...