×

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,929 என நிர்ணயம்

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.1,929 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.

14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை கடந்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் ரூ.879, சென்னையில் ரூ.868.50, சேலத்தில் ரூ.886.50 என நிர்ணயிக்கப்பட்டது. இவ்விலையில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல், இன்று அதிகாலை வெளியான நடப்பு மாதத்திற்கான (மார்ச்) விலை பட்டியலில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், அதே விலையில் நீடிக்க செய்துள்ளனர்.

அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.28 முதல் ரூ.31 வரை அதிகரித்துள்ளனர். சென்னையில் கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,899.50 என இருந்தநிலையில், ரூ.29.50 அதிகரித்து ரூ.1,929 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 2 மாதங்களில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.160 அதிகரித்தது. நடப்பு மாதம் ரூ.30 அதிகரித்துள்ளது. இப்படி தொடர்ந்து 3 மாதமாக ரூ.190 விலை உயர்ந்திருப்பதால், ஓட்டல் தொழில் மற்றும் இதர உணவு பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விலை உயர்வு மக்கள் தலையில் வந்து விடியும் வகையில், உணவு பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், வர்த்தக சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை நிலையாக வைத்துக் கொண்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Salem ,
× RELATED டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: 5...