தென்மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் முக்குலத்தோர் சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாக உள்ளது. முக்கிய வாக்கு வங்கியாக உள்ள இவர்களிடம் கடந்த காலத்து தொடர் நிகழ்வுகளால் அதிமுக மீதான கசப்புணர்வு அதிகரித்திருக்கிறது. எம்பிசி பிரிவிற்கான 20 சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை, 2021ல் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவசர கதியில் நிறைவேற்றினார். ஆனால், இது மார்ச் 2022ல் உச்சநீதிமன்றத்தால் ரத்தானது.
இதனால் அதிமுக மீது முக்குலத்தோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி இன்றுவரை உள்ளது. அதே நேரம் கட்சியிலும் இந்த சமூகத்தினருக்கு குறிப்பிடும்படியான பொறுப்புகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் இந்த சமூகத்தில் உள்ளவர்கள் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, அதிமுகவை பணியவைத்து காரியம் மேற்கொள்ளும் வகையில் ஒன்றிய பாஜ அரசு, ஒப்பந்த பணிகளில் எடப்பாடி பழனிசாமி உறவினர்களின் பினாமிகள் எனக்கூறி நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டவைகளில் ஒப்பந்ததாரர் தொடர்புடையவர்களின் வீடுகள், நிறுவனங்களில் குறிவைத்து திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளின் தென்மாவட்ட அதிமுகவின் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பலரிடமும் கோடிக்கணக்கில் பணம், நகைகளை பறிமுதல் செய்து அச்சுறுத்தியதற்கான ஆத்திரமும் இருக்கிறது.
கூட்டணியில் கைகோர்த்தாலும் பாஜவினர் மீதான இந்த ஆத்திரத்தின் அளவு ஒருபோதும் குறையாத நிலையில் அதிமுகவினரில் பலரும், காயக்கரை பட்டுப்போனவர்களை கூட்டணி வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலும் எப்படி கரைத்தடம் மறையும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இதுபோன்ற ரைடு அச்சுறுத்தல்களே அதிமுகவை, பாஜ அரசு அடிமைப்படுத்திட வழிவகுத்திருக்கும் குற்றச்சாட்டும் இருக்கிறது. சசிகலா தனியாக களமிறங்கும் நிலையில் சமுதாய ஓட்டுகள் பிரிவதும், அதிமுகவை வலிமை குன்றச் செய்துள்ளது. மேலும், ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது, முக்குலத்தோர் சமூகத்தினரின் வாக்குகள் திமுகவுக்கு கணிசமாக வந்து சேரும் வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.
இத்தோடு ‘அண்ணன் தம்பி மாமன் மச்சான்’ உணர்வில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உறவு மேம்பட்டிருக்கும் தென்மாவட்ட கிராமங்களில் பிரிவினையுடன் செயல்படும் பாஜவினரோடு, அதிமுக கூட்டணி போட்டிருப்பதும் வெறுப்பைச் சேர்த்திருக்கிறது. குறிப்பாக அதிமுகவினரில் பலரும் பாஜ கூட்டணியை விமர்சித்து வந்த நிலையில் திடுதிப்பென, திடீரென அமைந்த கூட்டணியால் அதிமுகவினரே அதிர்ந்து போய், செயல்பாடுகளில் முடங்கிப் போயுள்ளனர். தென் மாவட்டங்களில் பாஜவினர் எண்ணிக்கையில் சரிந்திருக்கும் நிலையிலும், தொகுதிகள் ஒதுக்கீட்டில் ஆதரவளித்து பிரசார பணிகளில் ஈடுபடுவதிலும் அதிமுகவினரிடம் ஆர்வமில்லை.
உங்களுடன் ஸ்டாலின், நலம் காப்போம் துவங்கி வீடுகளுக்கே ரேசன் பொருட்கள் விநியோகம், வேளாண் திட்டங்கள் வரை பல்வேறு திட்டங்களும், நடுத்தர, ஏழ்மையான, விவசாய மக்களிடம் நல்லாதரவு பெற்றுள்ளது. மேலும் வீட்டில் ஒவ்வொருவரும் ஏதாவதொரு அரசு வழங்கும் பலனை அனுபவிக்கும் வகையில் வகுக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் பயன்பாட்டினால் ஆளும் கட்சி மீதான ஈர்ப்பு அதிகரித்து, அதிமுக பாஜ கூட்டணி மீது எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களை அள்ளியுள்ளது. இம்முறை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
* பல லட்சம் கோடி ஊழல் செய்து ஜெயலலிதாவை சிக்க வைத்தவர் சசிகலா
தளவாய் சுந்தரம் பேசுகையில், இன்னொரு விஷயத்தை சொல்லக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். இப்போது அவர் வாயைத் திறக்க ஆரம்பித்து விட்டார். அதனால் இப்போது சொல்கிறேன். அம்மா இறப்பதற்கு காரணம் சசிகலா தான். தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் பல லட்சம் கோடி ஊழல் செய்து, வழக்கில் சிக்க வைத்தார். அம்மாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள், ஆனால் இவருக்கு பாஸ்போர்ட் கிடையாது என்பதால் தடுத்தார். அம்மாவிடம் ஒரு வேலைக்காரியாக இருந்தவர் இன்று கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்வதைப் பார்த்தால் எவ்வளவு பணம் இருக்கும் என்று பாருங்கள். இவரது துரோகம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த இயக்கத்திற்குத் துரோகம் செய்தவர்கள் யாரும் வாழ்ந்ததாகச் சரித்திரமே இல்லை என்றார்.
* அதிமுக எம்எல்ஏக்கள் பேசவிடாமல் தடை போட்ட அண்ணாமலை
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக சார்பில் காளப்பட்டியில் தெருமுனை பிரசார கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக எம்எல்ஏ.,க்கள், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டணி கட்சி சார்பில் பாஜ நிர்வாகிகள் முதலில் பேச அழைக்கப்பட்டனர். அப்போது அண்ணாமலையும் பேசினார். பாஜ நிர்வாகிகள் பேசி முடித்ததும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பேச திட்டமிட்டிருந்தனர். ஆனால் அண்ணாமலை பேசி முடித்ததும் இத்துடன் பிரசாரம் கூட்டம் முடிந்ததாக மைக்கில் அவரே அறிவித்தார். இதனால் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பேச முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
