×

திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை: கிரிஷ் சோடங்கர் சென்னை வருகை

சென்னை: திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று காலை சென்னை வருகிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் வேகமடைந்துள்ளன. தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத போதிலும், அரசியல் சூழல் முழுமையாக தேர்தல் களமாக மாறியுள்ளதால் கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து கட்சிகள் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

திமுக தலைமையிலான கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை திமுக கடந்த 22ம்தேதி முதல்கட்டமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் தரப்பில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராகுல்காந்தி கொடுத்து அனுப்பிய சீலிடப்பட்ட கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார். அதில் காங்கிரஸ் கேட்கக்கூடிய தொகுதிகள் இருந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து கனிமொழி எம்பியிடம், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காங்கிரஸ் தலைமையின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ள ஐவர் குழு முறைப்படி 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த இருதரப்பும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று காலை கோவாவில் இருந்து சென்னை வருகிறார்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக காங்கிரஸ் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படுமா அல்லது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் இந்த பேச்சுவார்த்தை முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

Tags : DMK ,Congress ,Girish Chodankar ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...