×

நான் ஊழல்வாதி அல்ல… நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன் : விடுதலையான பிறகு கெஜ்ரிவால் கண்ணீர் மல்க பேட்டி

புதுடெல்லி : நான் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். கடவுள் எங்களுடன் உள்ளார் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கே.கவிதா உள்ளிட்ட 23 பேரும் ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கெஜ்ரிவால், நீதிமன்ற வளாகத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம்.

கெஜ்ரிவால் ஊழல்வாதி இல்லை. கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் நேர்மையானவர்கள் என்பதை நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அரசியல் ரீதியாகத் திட்டமிடப்பட்டுத் தொடரப்பட்ட சதியில் இன்று உண்மை வென்றுள்ளது.நான் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். கடவுள் எங்களுடன் உள்ளார்.நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர். அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம்,’ என்று குறிப்பிட்டார். அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் ‘உண்மை எப்போதும் வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Former ,
× RELATED ஒன்றிய பாஜக அரசு மதுபான கொள்கை...