- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சேலம்
- விருதுநகர் ஊராட்சி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சேலம் அரசு அருங்காட்சியகம்
- அருங்காட்சியகத் துறை
- சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் துறை
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.2.2026 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அருங்காட்சியகத் துறையால் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு அருங்காட்சியக புதிய கட்டடம் மற்றும் 12.43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியக புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 248.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை மற்றும் மாமல்லபுரத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியக புதிய கட்டடங்கள், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் புதிய படிமக் கூடம் மற்றும் சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
சேலம் அரசு அருங்காட்சியக புதிய கட்டடம் திறந்து வைத்தல்
சேலம் அரசு அருங்காட்சியகம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1979 முதல் அருங்காட்சியகத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த இவ்வருங்காட்சியகம், தற்போது சேலம் அஸ்தம்பட்டியில் 50 சென்ட் நிலப்பரப்பில், 9,840 சதுர அடியில், 5 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய அருங்காட்சியக கட்டடத்தில், ஜல்லிக்கட்டு நடுகல், கல்வெட்டுகள், நாமக்கல் கவிஞர் வரைந்த மகாத்மா காந்தியடிகளின் ஆளுயர ஓவியம் உள்ளிட்ட அரிய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விருதுநகர் அரசு அருங்காட்சியக புதிய கட்டடம் திறந்து வைத்தல்
விருதுநகர் அரசு அருங்காட்சியகம் 2001 ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது, மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில். 14,420 சதுர அடியில், 12.43 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய அருங்காட்சியகக் கட்டடத்தில், வீரக்கற்கள். கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதிய அருங்காட்சியக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்
திருவண்ணாமலை தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் ஆணாய்ப்பிறந்தான் என்ற இடத்தில், கிரிவலப் பாதை அருகில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில், தமிழர் நாகரிகம், இலக்கியச் செழுமை, கட்டடக்கலை மரபு, சம்புவரையர் ஆட்சி மற்றும் வந்தவாசிப் போரின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துக்கூறும் வகையில் ஒன்பது காட்சிக்கூடங்கள் அமைக்கும் வகையில் 52,000 சதுர அடிப் பரப்பளவில், 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அருங்காட்சியகக் கட்டடம்:
மாமல்லபுரத்தில், பல்லவர் காலச் சிற்பங்கள் மற்றும் கட்டடக்கலைச் சிறப்பினால் UNESCO உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்நகரில், கிழக்கு கடற்கரைச் சாலையில் 4.5 ஏக்கர் நிலத்தில், 60,500 சதுர அடியில், 109.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம்:
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் 48,000 சதுர அடிப் பரப்பளவில், 13 காட்சிக்கூடங்களுடன். மெழுகு இழப்பு முறையில் உருவாக்கப்பட்ட சோழர் கால ஐம்பொன் படிமங்கள். தமிழர்களின் உலோகக் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 51.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய படிமக் கூடம்:
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் 28,000 சதுர அடிப் பரப்பளவில், 1937 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையினரிடமிருந்து பெறப்பட்ட 400 அரிய சிந்துவெளி அரும் பொருட்களை காட்சிப்படுத்தவும், 1924 ஆம் ஆண்டு சிந்துவெளி நாகரிகத்தை உலகறியச் செய்த ஜான் ஹுபர்ட் மார்ஷல் அவர்களின் பங்களிப்பை நினைவுகூறிடும் வகையிலும், 34.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கம்;
என மொத்தம் 248.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை மற்றும் மாமல்லபுரத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியக புதிய கட்டடங்கள். புதிய படிமக் கூடம் மற்றும் சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன். இ.ஆ.ப., அருங்காட்சியகத் துறை இயக்குநர் கவிதா ராமு. இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், காணொலிக் காட்சி வாயிலாக விருதுநகர் அரசு அருங்காட்சியகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
