×

நெல்லை பேட்டை பகுதியில் அதிரடி வேட்டை பைக்குகளில் விதிமீறிய 50 பேர் மீது வழக்குபதிவு

*7 சைலன்சர்கள் பறிமுதல்

நெல்லை : நெல்லை பேட்டை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே பைக்குகளில் அதிக சத்தம் எழுப்பியவாறு சென்ற இளைஞர்களிடம் இருந்து 7 சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

நெல்லை மாநகர பகுதிகளில் வாகன போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தி சிலர் பைக்குகளை ஓட்டிச் செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சந்திப்பு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பேட்டை பள்ளிகள், கல்லூரி அருகே நடந்த இந்த வாகன சோதனையில் எஸ்எஸ்ஐ ராமையா, எஸ்எஸ்ஐ சிமியோன் ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அந்த வழியாக சைலன்ஸர்களில் அதிக சத்தம் எழுப்பியபடி வந்த பைக்குகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பைக்குகளில் மாற்றம் செய்யப்பட்ட 7 சைலன்சர்களை போலீசார் உடனடியாக கழற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கை ஓட்டியவர்கள் மீதும், ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம் செய்தவர்கள் மீதும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிபகுதிகளில் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடக்கும் என போலீசார் எச்சரித்தனர்.

Tags : Nellai Pettai ,Nellai ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்...