பார்க்கிங் வசதியில்லாத கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் புதிய கட்டிட பணி

கோவை, பிப். 9: கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். வாகன பார்க்கிங் வசதி கூட இல்லாமல் பல கோடியில் கட்டிடம் கட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதியுதவி மூலம் தரைத் தளத்துடன் கூடிய 6 மாடி கட்டிடம் ரூ.110.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. இதில், கட்டுமான பணிக்கு என ரூ.110.90 கோடி, உபகரணங்கள் செலவிற்காக ரூ.189.79 கோடி என மொத்தம் ரூ.300.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டிடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி வாயிலாக துவக்கிவைத்தார்.

 நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன், மருத்துவமனை டீன் காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த புதிய கட்டிடத்தில் 9 ஆபரேஷன் தியேட்டர்கள், 2 ஹைப்ரிட் ஆபரேஷன் தியேட்டர், பொது அறுவை சிகிச்சை, காஸ்ட்ரோ என்ட்ராலஜி, எலும்பியல், தீக்காயம் மற்றும் சி.டி.எஸ், வாஸ்குலர், நியூரோலஜிக்கான ஹைப்ரிட் ஆபரேஷன் தியேட்டர், பொது வார்டுகள் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மொத்தம் 232 படுக்கை வசதிகளுடன் அமைய உள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு தற்போது தினமும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தால் கூடுதல் நோயாளிகள் வருவார்கள். ஏற்கனவே, கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய கட்டிடங்களின் வரவு காரணமாக மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லாத சூழல் நிலவி வருகிறது. தவிர, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தகூட இடமில்லை.பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டும் இவ்வளவு பெரிய கட்டிடத்திலும் பார்க்கிங் வசதி இல்லாமல் வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். மருத்துவமனை வளாகம் குறுகி நெருக்கடியுடன் காட்சியளிக்கும். எனவே, மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், மருத்துவர்களின் தேவையை கருதி வாகனங்கள் நிறுத்த தேவையான பார்க்கிங் வசதியை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் டீன் காளிதாஸ் கூறுகையில், “டாக்டர்கள், வாகனம் பார்க்கிங் செய்ய தனியிடம் தயார் செய்யப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories:

>