கேரளாவில் இதுவரை அடுத்தடுத்து 2 முறை எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்ற நிலையை பினராயி விஜயன் தான் மாற்றி அமைத்தார். கடந்த 2016 தேர்தலிலும், தொடர்ந்து 2021 தேர்தலிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்று பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு ஆட்சியமைத்தது. கேரளாவில் தொடர்ந்து 10 வருடங்கள் முதல்வராக இருந்த சாதனையையும் இவர் படைத்துள்ளார். இந்த சாதனைக்கு பினராயி விஜயன் தான் முக்கிய காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.
இதனால் கேரளாவில் பினராயி விஜயனின் 3.0 அரசு மீண்டும் அமைய வேண்டும் என்று இக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் சில நிபந்தனைகள் பினராயி விஜயனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 75 வயதுக்கு மேல் ஆனவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது, 2 முறை அடுத்தடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்பன உள்பட பல நிபந்தனைகள் இக்கட்சியில் உள்ளன.
இந்த நிபந்தனைகளை பினராயி விஜயனுக்காக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலிலும் பினராயி விஜயனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 62 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் குறைந்தது 50 பேருக்காவது இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளர்வகளின் வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு அவர்களில் சிலருக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் உள்பட 17 பேர் செயற்குழுவில் உள்ளனர். இவர்களில் 4 பேர் தவிர 13 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். பினராயி விஜயன் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் தாமஸ் ஐசக், ஷைலஜா, தற்போதைய அமைச்சர்களான பாலகோபால், ராஜீவ், முகம்மது ரியாஸ், வாசவன், சஜி செரியான் மற்றும் எம்.வி. ஜெயராஜன், எம். ஸ்வராஜ் ஆகியோருக்கும் இந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்.
