×

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி, பிச்சை எடுத்து அரசு ஊழியர்கள் போராட்டம்

கோவை, பிப். 9: கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் 4.5 லட்சம்   காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம  உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.5 லட்சம் பேருக்கு  காலமுறை ஊதியம்  வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதிசேஷையா குழுவின்  பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் 2ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பாரி வைப்பது, சாலையில் படுத்து உருளுதல் உள்ளிட்ட நூதன போராட்டங்களை அவர்கள் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் 7வது நாளாக நேற்றும் நீடித்தது. ஏராளமான அரசு ஊழியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பூசியபடி கையில் திருவோடு ஏந்தி, பிச்சை எடுத்தபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Tags : servants ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து