×

217 அரசுப் பள்ளிகளில் ரூ.296.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 35 மாவட்டங்களில், 217 அரசுப் பள்ளிகளில் 296.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1232 வகுப்பறைக் கட்டடங்கள், 9 ஆய்வகக் கட்டடங்கள், 24 குடிநீர் வசதிகள், 60 கழிவறைகள் மற்றும் 500 மீட்டர் சுற்றுச்சுவர், பொது நூலக இயக்ககம் சார்பில் 5.65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இராணிப்பேட்டை மைய நூலகம் மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் இதர கட்டடங்களை திறந்து வைத்தல்

நபார்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்தின் 35 மாவட்டங்களில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 217 அரசுப் பள்ளிகளில் 296 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,232 வகுப்பறைக் கட்டடங்கள், 9 ஆய்வகக் கட்டடங்கள், 24 குடிநீர் வசதிகள், 60 கழிவறைகள் மற்றும் 500 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பொது நூலக இயக்ககம் சார்பில் முடிவுற்ற பணியினை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

பொது நூலக இயக்ககம் சார்பில் 5 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். பொது நூலக இயக்ககம் சார்பில் கடலூர் மாவட்டம், கடலூரில் 98 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்படவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலக கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி. சந்திர மோகன், பொது நூலக இயக்குநர் (மு.கூ.பொ.) ச.ஜெயந்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ. நரேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,School Education Department ,
× RELATED 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296.62 கோடி செலவில்...