ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு அனுமதி பெற்று, வணிகரீதியாக அனுமதி இன்றி காட்டேஜ்களாக செயல்பட்டு வந்த இரு கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கூடலூர் அருகே இவ்வாறு செயல்பட்ட இரண்டு காட்டேஜ்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கவும், இயற்கை இடர்பாடுகளை களையவும் மாஸ்டர் பிளான் சட்டம், மலையிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் கொண்டு வரப்பட்டது. செங்குத்தான மலைச்சரிவில் கட்டிடங்கள் கட்டக்கூடாது.
குடியிருப்பு அனுமதி வாங்கி வணிக ரீதியாக கட்டிடம் பயன்படுத்தக்கூடாது. வணிக கட்டிடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டகூடாது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. இருப்பினும் பலர் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் கட்டிடங்களை கட்டுகின்றனர். மேலும் சிலர் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதனை வணிகரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிகரீதியாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆரணி அவுஸ் பகுதியில் இரு கட்டிடங்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இதுபோன்று குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்று வணிகரீதியாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மசினகுடி மாவநல்லா பகுதியில் கட்டிட அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இரு காட்டேஜ்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
