சென்னை, பிப்.26: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளைக் காரணம் காட்டி, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புறநகர் ரயில் சேவைகளைக் கணிசமாகக் குறைத்துள்ள ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 204 ரயில் சேவைகளுக்குப் பதிலாக, தற்போது 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும், இந்தத் தற்காலிக மாற்றம் வரும் ஏப்ரல் 5ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் தொழிலாளர்களும், தேர்வுகள் மற்றும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக, கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கவும், தமிழக அரசுடன் இணைந்து கூடுதல் மாநகரப் பேருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் இயக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவையான தடையற்ற போக்குவரத்து வசதியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
