×

கண்ணகி நகரில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன கபடி உள்விளையாட்டு அரங்கத்தில் கபடி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து பார்வையிட்டார் துணை முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணகி நகரில் 75.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன கபடி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (25.2.2026) கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகின்றது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் சிறிய விளையாட்டரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு நகரம் என பல்வேறு முன்னேடுப்புகளை செய்து வருகின்றார்.

மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும், விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காகவும், விமான பயணங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி வழங்கி வருகின்றார். இதன் காரணமாக தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றார்கள்.

இதன் ஒரு பகுதியாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபடி வீராங்கனை ர.கார்த்திகா பஹ்ரைனில் 2025 இல் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆசிய அளவிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்று இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வதற்கு காரணமாக விளையாடினார். மேலும் கண்ணகி நகரைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கபடி போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கண்ணகி நகரில் சர்வதேச தரத்திலான கபடி உள்விளையாட்டரங்கம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்ணகி நகர் மைதானத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக தாட்கோ நிதியிலிருந்து 75.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம், உடற்பயிற்சி கூடம், பயிற்சியாளர் அறை, ஒப்பனை அறை மற்றும் சர்வதேச தரத்திலான செயற்கை தளங்களுடன் புதியதாக கபடி உள்விளையாட்டரங்கம் கட்டப்பட்டது.

கண்ணகி நகரில் 75.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன கபடி உள்விளையாட்டு அரங்கத்தை இன்று (25.2.2026) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் கபடி அணியின் துணை கேப்டன் வீராங்கனை ர. கார்த்திகா திறந்து வைத்தார். முன்னதாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கபடி உள்விளையாட்டு அரங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வதற்கு காரணமாக வீராங்கனை ர.கார்த்திகாவிற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஊக்கத்தொகையாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கண்ணகி நகர் கபடி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கான பல்வேறு உடற்பயிற்சி சாதனங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிராபகர ராஜா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் நா. இளையராஜா, துணை மேயர் மு. மகேஷ் குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் க.சு. கந்தசாமி, நிலைக்குழுத் தலைவர் த. விசுவநாதன், மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ். வி. ரவிச்சந்திரன், வி. இ. மதியழகன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் துணை ஆணையாளர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, (பணிகள்), அஃப்தாப் ரசூல், (தெற்கு வட்டாரம்) மற்றும் கபடி வீரர், வீராங்கனைகள் உடனிருந்தனர்.

Tags : Deputy Chief Minister ,Kabaddi Sports Competition ,Kabaddi Indoor Sports Stadium ,Kannagi ,Chennai ,Tamil Nadu ,Udayanidhi Stalin ,Kannagi Nagar ,Kabaddi Sports Tournament ,Tamil ,Nadu ,Chief Minister ,
× RELATED துறைமுகம் சட்டமன்றத்...