- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- 3 டைடல் நியோ பூங்காக்கள்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்த
- ரெடியார்பட்டி கிராமம்
- திருநெல்வேலி மாவட்டம்
- கூஹைக்குண்டு கிராமம்
- விருதுநகர் மாவட்டம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி கிராமத்தில் 39.06 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம், கூரைக்குண்டு கிராமத்தில் 38.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் ஈரோடு மாவட்டம், கங்காபுரம் கிராமத்தில் 39.87 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், என மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு நாளை (26.2.2026) தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். இப்பூங்காக்கள் ஒவ்வொன்றும் சுமார் 600 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள்;
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் முதலமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைத்திட முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கும் முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் (25.2.2026) அடிக்கல் நாட்டப்பட்டது.இவை மட்டுமின்றி நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விரைவில் இவற்றின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவுள்ளன.
திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுதல்;

தகவல் தொழில்நுட்பத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி கிராமத்தில், 39.06 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு கிராமத்தில் 38.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், கங்காபுரம் கிராமத்தில் 39.87 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு நாளையதினம் (26.2.2026) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

இவை ஒவ்வொன்றும் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்டு IT, ITeS, BPO’s மற்றும் Start-ups போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் கட்டப்படவுள்ளன. இப்பூங்காக்கள், தலா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 1800 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் அனைத்து அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.

இந்த மினி டைடல் பூங்காக்களின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வசித்துவரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன் அப்பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவிடும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
