மும்பை: பிரதமர் மோடி குறித்த விமர்சன வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 2018ம் ஆண்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசிய விவகாரத்தில், கடந்த 20ம் தேதி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி பிவண்டி நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பான வழக்கிலும், நேற்று கல்வான் பள்ளத்தாக்கு மோதல் விவகாரத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டது.
இத்தகைய தொடர் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில பிரசார கூட்டத்தில் பிரதமரை ‘திருடர்களின் தலைவர்’ என்று விமர்சித்ததாக மகாராஷ்டிராவில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆர். போர்க்கர், நேற்று அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து விசாரணையை முடித்து வைத்தார். முன்னதாக நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் சுதீப் பாஸ்போலா வாதிடுகையில், ‘இந்த விமர்சனம் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது குழுவையோ குறிக்கவில்லை; பொதுவான அரசியல் பேச்சு என்பதால் இதன் மீது அவதூறு வழக்கு தொடர சட்டப்படி இடமில்லை’ என்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த மனுவை மாநில அரசு வழக்கறிஞர் மிலிந்த் சாத்தே எதிர்த்த நிலையில், இறுதித் தீர்ப்பு வரும் வரை ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பு நீடிக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டு, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
