×

தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள பேக்கரியில் வாங்கிய பிஸ்கட்டில் புழுக்கள்: உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

தாம்பரம்: தாம்பரம் ராஜாஜி சாலையில் புழுக்களுடன் பிஸ்கட் விற்ற பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.  
மேற்கு தாம்பரம் ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (20). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்று, ரூ.50  கொடுத்து ராகி பிஸ்கட் டப்பா ஒன்றை வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு சென்று பிஸ்கட்டை சாப்பிட எடுத்தபோது, அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பிஸ்கட்டில் புழுக்கள் எப்படி வந்திருக்கும் என்ற சந்தேகத்தால் நேற்று காலை மீண்டும் அதே பேக்கரிக்கு சென்று ரூ.50 செலுத்தி மற்றொரு ராகி பிஸ்கட் டப்பாவை வாங்கினார். அதிலும் புழுக்கள் இருந்துள்ளது. இதுகுறித்து தாம்பரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விமலவிநாயகத்திடம் புகாரளித்தார்.

அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் விமல விநாயகம் சம்பந்தப்பட்ட பேக்கரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேக்கரியில் இருந்த ராகி பிஸ்கட்களில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேக்கரியில் இருந்து சுமார் 2.5 கிலோ ராகி பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் மாதிரிகளை கிண்டி ஆய்வகத்திற்கு சோதனைக்காக உணவு பாதுகாப்பு அலுவலர் அனுப்பினார். மேலும் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு அவர் நோட்டீஸ் வழங்கினார். தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்பட உணவு பொருட்கள், காலாவதியான பொருட்கள், புழுக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒன்றாக கடந்த மாதம் 24ம் தேதி தாம்பரத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரிஞ்சி சாதம் வாங்கிய வாலிபர் அதில் புழுக்கள் இருந்ததை அறியாமல் சாப்பிட்டதால் அவருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் அதேபோல ஒரு பேக்கரியில் வாங்கிய ராகி பிஸ்கட்டில் புழுக்கள் இருந்தது தாம்பரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால், அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

தாம்பரம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் சரிவர ஆய்வு நடத்தாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். எனவே இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தலையிட்டு தாம்பரம் பகுதியில் உள்ள அனைத்து உணவு சம்பந்தமான கடைகளிலும் ஆய்வு செய்து கலப்பட, காலாவதியான பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bakery ,Tambaram Rajaji Road: Food Safety Department ,
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்