×

மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு: ஜூன் 14-ல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

நடப்பாண்டு ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இத்தொடர் ஜூன் 12ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடங்குகிறது. மேலும் இறுதிப்போட்டி ஜூலை 5ம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

மேலும் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மெகா போட்டி ஜூன் 14ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் ஆண்கள் அணி இந்தியாவுடனான போட்டிகளைப் புறக்கணிப்பதாகக் கூறிய முடிவில் இருந்து பின்வாங்கிய போதிலும், மகளிர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன.

குழு 1-இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குழு 2-இல் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்திய மகளிர் அணி தனது உலகக்கோப்பை பயணத்தை ஜூன் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் 17ம் தேதி ஹெட்டிங்லியில் நெதர்லாந்து அணியையும், ஜூன் 21ம் தேதி ஓல்ட் ட்ராஃபோர்டில் தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் இறுதிப் பகுதியில் ஜூன் 25ம் தேதி வங்கதேசத்துடனும், ஜூன் 28ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா மோதவுள்ளது.

தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tags : Women's T20 World Cup Series ,India ,Pakistan ,ICC ,Women's T20 World Cup ,UK ,England ,Sri Lanka ,Edgbaston Stadium ,
× RELATED கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று...