×

பிப்.27ம் தேதி முதல் Anjadip போர்க்கப்பல் கடற்படையால் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

சென்னை: நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘அஞ்சதீப்’ போர்க்கப்பல், சென்னை துறைமுகத்தில் பிப்.27 முதல் கடற்படையால் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் 3வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான இது, எதிரி நாட்டுக் கப்பல்கள் வராமல் தடுக்க மற்றும் கடலில் கண்ணி வெடிகளை பதிக்கும் திறன் கொண்டது

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஊடுருவலை முறியடிக்கவும், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தவும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அஞ்சதீப் (INS Anjadip) போர்க்கப்பல், வரும் பிப்ரவரி 27, 2026 அன்று இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுகிறது.

சுமார் 80% உள்நாட்டுத் தயாரிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அதிநவீனப் போர்க்கப்பல், ஆழம் குறைந்த நீர்நிலைகளில் மறைந்திருக்கும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிப்பதில் மிகச்சிறந்த திறனைப் பெற்றுள்ளது.

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், சென்னை துறைமுகத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவில் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முன்னிலையில் இக்கப்பல் முறைப்படி கமிஷன் செய்யப்பட உள்ளது. சுமார் ரூ.780 கோடி செலவில் உருவான இந்த ‘சுதேசி வேட்டைக்காரன்’, இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ‘Type 056A’ போர்க்கப்பல்களுடன் ஒப்பிடும்போது, ஐஎன்எஸ் அஞ்சதீப் அளவில் சிறியதாக இருந்தாலும் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறைந்த சத்தத் தொழில்நுட்பம் மற்றும் குறுகிய இடங்களில் விரைவாகத் திரும்பும் திறன், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு ‘கேம் சேஞ்சராக’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Navy ,Chennai ,
× RELATED எஸ்ஐஆர் பணி நிறைவு-இறுதி பட்டியல்...