×

பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் சசிகலாவுக்கு இன்று உற்சாக வரவேற்பு அமமுக நிர்வாகிகள் ஏற்பாடு தீவிரம்

வேலூர், பிப். 8:திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் சசிகலாவை வரவேற்க அமமுக நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து பெங்களூரு சிறையில் இருந்து சகிகலா கடந்த 27ம் தேதி விடுதலை ஆனார். கொரோனா பாதிப்பு காரணமாக சசிகலா, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பபட்டு, பெங்களூருவில் 7 நாட்கள் தனிமையில் இருந்து, இன்று காலை சென்னை திரும்புகிறார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு வர உள்ள சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க வழி நெடுங்கிலும் அமமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு மையங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளதால், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சசிகலாவின் வாகனத்தை பின்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் என ஒவ்வொரு மாவட்ட எல்லைகளின் தொடக்கம் மற்றும் முடிவு பகுதிகளில் செண்டை மேளம், புலியாட்டம், டிரம்ஸ் இசை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வாணியம்பாடி பைபாஸ், ஆம்பூர், மாதனூர், பள்ளிகொண்டா டோல்கேட், வேலூர், பூட்டுதாக்கு, மேல்விஷாரம், எஸ்எஸ்எஸ் கல்லூரி, வாலாஜா டோல்கேட், காவேரிப்பாக்கம், கரும்பூர், ஒச்சேரி, சித்தஞ்சிகோவில், அவலூர், ெபரும்புளிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமமுக மாவட்ட செயலாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். சசிகலா வருகையொட்டி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags : Sasikala ,Bangalore ,Chennai ,
× RELATED தேர்தல் தோல்வியால் கலங்க வேண்டாம்;...