×

தூத்துக்குடி மாவட்ட மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் ஜெகன் பெரியசாமி அறிக்கை


தூத்துக்குடி, பிப். 5: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றும் தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கடந்த 10ஆண்டு காலமான அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. வேலையில்லாத திண்டாட்டம், பணப்பற்றாக்குறை, பொருளாதார சீர்குலைவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்றவற்றால் தமிழக மக்கள் நாள்தோறும் மிகப்பெரும் இன்னலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகையே உலுக்கிய கொரோனா நோய் தொற்றால் தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லமுடியாத அளவிற்கு பெரும் துயருக்கு ஆளானார்கள்.
இந்தநேரத்தில் தமிழக அரசே தம்மை நம்பியிருந்த மக்களை கைவிட்டுவிட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற சிறப்பு திட்டத்தை துவக்கி மாவட்டம்தோறும் ஊரடங்கால் வேலை மற்றும் வருமானம் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான அரிசி, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை திமுகவினர் மூலமாக வீடு தேடி சென்று வழங்கி மக்களிடத்தில் மிகுந்த நன்மதிப்பை பெற்றார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள 234சட்டமன்ற தொகுதி மக்களையும் நேரில் சென்று சந்தித்து மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறார். இதன்படி, இன்று (5ம் தேதி) காலை 8மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி ஆகிய 3சட்டமன்ற தொகுதி மக்களையும் எட்டயபுரம் அருகேயுள்ள கலைஞர் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேரில் சந்தித்து அவர் பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெறுகிறார். அதனை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றித் தரவும் திட்டம் வகுத்து வருகிறார்.

இப்படி மக்கள் நலனுக்காக கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்திலும்  ஓய்வின்றி உழைத்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்கிட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அவரது கரத்தை வலுப்படுத்தவேண்டியது அவசியமாகும்.எனவே, இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று குறைகள் தொடர்பான மனுக்களை அளிக்க அன்போடு வரவேற்கிறேன். மேலும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதல்வராக்கிட வேண்டும்’’ என்றார்.

Tags : Thoothukudi District ,Jagan Periyasamy ,Stalin ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்