×

பெருங்குடி குப்பை கிடங்கை சீரமைக்க பயோமைனிங் 2.0 திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, பிப்.21: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சென்னையின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பெயர் மாற்றம் மற்றும் சமூக நலம் சார்ந்த 100க்கும் மேற்பட்ட முக்கியத் தீர்மானங்களுக்கு ஒருமித்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
தலைவர்களின் பெயர்
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.
மெரினா லூப் சாலை, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சாலை’ என பெயர் மாற்றப்படும்.
4வது மண்டலம், சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விளையாட்டு அரங்கிற்கு ‘கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு வளாகம்’ என பெயர் சூட்டப்படுகிறது.
 9 மற்றும் 13வது மண்டலங்களில் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடங்களுக்கு ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’, ‘கலைஞர் மு.கருணாநிதி திருமண மண்டபம்’ மற்றும் ‘அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை’ என்று பெயர் மாற்றப்படுகிறது.

குப்பையில்லா சென்னை
பெருங்குடி குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான டன் பழைய குப்பையை அகற்றும் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சியுள்ள குப்பையை முழுமையாக அகற்றுவதற்கான 2ம் கட்ட பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டு, அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்படும்.

வீட்டு கழிவுகள் மேலாண்மை
பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் நாப்கின்கள், டயப்பர்கள் மற்றும் காலாவதியான மருந்துகள் போன்ற அபாயகரமான வீட்டு கழிவுகளை பொது குப்பையுடன் கலப்பதை தவிர்க்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் இக்கழிவுகளைத் தனியாக சேகரித்து, பாதுகாப்பான முறையில் அழிப்பதற்கான விரிவான கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

ரோபோ தொழில்நுட்பம்
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்யும் வகையில், கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய ரோபோட்டிக் மல்டிபர்ப்பஸ் எக்ஸவேட்டர் என்ற நவீன ரோபோ இயந்திரம் பராமரிப்பு பணிகளுக்காக கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், சாலைகளில் புழுதி பறப்பதைத் தடுக்க, 20 புதிய ‘ரைடு ஆன் ஸ்வீப்பர்’ இயந்திரங்கள் மண்டலம் 6, 9, 10, 13 ஆகியவற்றுக்கு வாங்கப்படவுள்ளன.

ஏழைகளுக்கு சலுகை
சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக (பாலங்கள், சாலை விரிவாக்கம்) ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, அங்கு வசிக்கும் மக்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு மாற்றப்படுகின்றனர். அவ்வாறு மாற்றப்படும்போது, பயனாளிகள் தங்கள் பங்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளது. வறுமையின் காரணமாகப் பலரால் இத்தொகையைச் செலுத்த முடிவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, மண்டலம் 5 (ராமதாஸ் நகர்), 8, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் மறுகுடியமர்வு செய்யப்படும் 54க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை, சென்னை மாநகராட்சியே தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தும்.

கல்விக்கு முக்கியத்துவம்:
சென்னையில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் பள்ளிகளான செம்மஞ்சேரி நடுநிலைப் பள்ளி, கண்ணகி நகர் நடுநிலைப் பள்ளி மற்றும் மண்டலம் 15ல் உள்ள விவேகானந்தர் தெரு நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் இடப்பற்றாக்குறையைப் போக்க கூடுதல் வகுப்பறைகள், நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் பணியாளர் அறைகள் கட்டப்படவுள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், அதிகாரிகளின் ஆய்வுகளைத் துரிதப்படுத்தவும் கல்வித் துறைக்கு 14 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

சுற்றுச்சூழல் சென்சார்
சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் கண்டறியப்பட்ட 75 முக்கிய இடங்களில், நவீன ‘சுற்றுச்சூழல் சென்சார்கள்’ பொருத்தப்படவுள்ளன. இவை 24 மணி நேரமும் காற்றின் தரம், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் ஒலி மாசு ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்யும். இந்தத் தகவல்கள் அனைத்தும் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்தக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு, நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும்.

ஹைட்ராலிக் லிப்ட்
நகரின் உயரமான மரக்கிளைகளை வெட்டவும், தெருவிளக்குகளைப் பராமரிக்கவும் மனிதர்கள் ஏறுவதைத் தவிர்க்க, 9 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய 5 சிறிய வகை ஹைட்ராலிக் ஏரியல் லிப்ட் வாகனங்கள் வாங்கப்படவுள்ளன.

மருத்துவ வசதி
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும். மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு படிகள் வழங்கப்படும்.

பாலங்கள்
கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே உள்ள பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்படவுள்ளது.

இணைப்பு சாலை
ராஜிவ்காந்தி சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் திட்டத்திற்காக, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றம் செய்ய தடையின்மை சான்று வழங்கப்பட்டது.

மணலி ஏரி
மணலி ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்பட்டுள்ளது.

வாட்டர் லேண்ட் டிரைவ்
திருவான்மியூர் கடற்கரை சாலையில் மழைநீர் தேங்காதவண்ணம் ‘இன்டர்லாக்கிங்’ கற்கள் பதிக்கப்படவுள்ளன.

பிக்கெட் பால் கோர்ட்
மண்டலம் 6, பாஷ்யம் 1வது தெருவில் புதிதாக ‘பிக்கெட் பால்’ விளையாட்டுத் திடல் அமைக்கப்படும்.

உள்விளையாட்டு அரங்கம்
சோழிங்கநல்லூர், குமரன்குடில் பகுதியில் புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Colongudi ,Garbage Warehouse ,Chennai ,Chennai Municipal Council ,Mayor ,Priya ,Ribbon House ,Deputy ,Mahesh Kumar ,Municipal Commissioner ,Kumarkuruparan ,
× RELATED கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தும்...