சென்னை: தோழமைச் சக்திகளுடன் சிண்டு முடியும் வேலைகளில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் லோடிங் 2.0 ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவிலேயே பூத் லெவலில் டிஜிட்டல் ஏஜென்ட்களை வைத்திருக்கும் அரசியல் இயக்கம் என்றால், அது நம்முடைய திமுக தான். ஐ.டி.விங் என்றால் ஆன்லைன் வேலை மட்டும் தான் பார்ப்பார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆப்லைனிலும் கலக்குவார்கள் என்று நீங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நம்மைக் களங்கப்படுத்தி, தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் தமிழ்நாட்டை சிதைத்துவிடலாம் என்று நம்முடைய எதிரிகள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான், அவதூறுகள்.
எனவே, அந்த அவதூறுகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல், சோஷியல் மீடியாவிற்கான அஜெண்டாவையும் நாம்தான் செட் செய்ய வேண்டும். டிபென்ஸ் மட்டுமே ஆடிக் கொண்டு இருக்கக் கூடாது; அவ்வப்போது அட்டாக்கிங் மோடுக்கும் செல்ல வேண்டும். இன்றைக்கு நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய முதல் விஷயமே ‘ஃபேக் நியூஸ்’தான். தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ண வேண்டும். அந்தக் கலவரத் தீயில் குளிர் காய வேண்டும் என்று எதிரிகள் நினைக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் டிசைன் டிசைனாக பொய்ச் செய்திகளைப் பரப்பிப் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் பிளான் எல்லாம் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கிறார்கள். இந்த பொய்ச் செய்திகள் எனும் சவால்களை நாம் முறியடித்தாக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் மிக விழிப்புடன் ஆன்லைனில் செயலாற்ற வேண்டும்.
பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கென்றே, நிறைய ‘ரைட் விங்’ அக்கவுண்ட்களை பாஜ நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதில் பாதி அதிகாரப்பூர்வ பக்கங்கள், மீதியெல்லாம் மீம்ஸ் பேஜ் போன்று இருக்கும் பக்கங்கள். இவ்வாறு எதுவாக இருந்தாலும், நம்மைப் பற்றி ஒரு பொய்ச் செய்தி பரப்புகிறார்கள் என்றால், உடனே ஆதாரத்துடன் கமெண்ட்ஸ், ரிப்ளைஸ்-இல் நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அந்தப் பொய்ச் செய்தியைப் படிப்பவர்களில் பாதி பேர் நம்முடைய விளக்கத்தைப் படித்தால் கூட அது உங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.
இப்போது கூட டெல்லியில் ஒன்றிய அரசு நடத்தும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி, அமைச்சர்கள் உள்பட பல பாஜவினர் போலியான பெருமைகளை ஷேர் செய்து கொண்டு இருந்தார்கள். மொத்த பேரும் சேர்ந்து அம்பலப்படுத்தியதும் அந்த ட்வீட்டை எல்லாம் அமைச்சரே டெலிட் செய்துவிட்டார்! தோழமைச் சக்திகளுடன் சிண்டு முடியும் வேலைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக் கூடாது.
களம் நமக்குச் சாதகமாக இருக்கிறது. வெற்றி பெறுபவர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். களத்திலும், ஆன்லைனிலும் நாம் சரியாகச் செயல்பட்டோம் என்றால் நம்முடைய டார்கெட்டை நாம் நிச்சயம் அச்சீவ் செய்துவிடுவோம். அதற்கு அடித்தளமாகத்தான் இன்றைக்கு ‘ஆடுகளம்’ செயலியை லான்ச் செய்திருக்கிறோம்.
2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த அனைத்துத் தேர்தலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். திமுக கூட்டணிதான் வெல்லும் என்று தெரிந்தே நடந்த தேர்தல்கள்தான் அனைத்தும்! ஆனால், எப்படிப்பட்ட மார்ஜினில் வெற்றி பெறுவோம் , எவ்வளவு வாக்கு வித்தியாசம்.. இந்த முடிவுகளுக்காகத்தான் நாம் காத்திருப்போம். 2026 தேர்தலும் அதே போன்றுதான். தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்பதை நோக்கித்தான் நாம் அனைவரும் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.
அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல், கொள்கைக்காக இணையத்தில் களமாடும் தோழர்கள் தி.மு.க.விற்கு மட்டும்தான் உண்டு! இதை நீங்கள் பதவிக்காக செய்யவில்லை! எம்.பி.ஆக வேண்டும்-எம்எல்ஏ ஆக வேண்டும் – கவுன்சிலர் ஆக வேண்டும் என்று செய்யவில்லை. “இந்த இயக்கத்தால் கல்வியறிவைப் பெற்றவர்கள் நாம், கழகத்தின் திட்டங்களால் உயர்ந்தவர்கள் நாம், கலைஞரால் சமூகநீதிப் பார்வையை கற்றுக்கொண்டவர்கள் நாம், மொத்தத்தில், “திராவிடத்தால் எழுந்தோம்” என்கிற நன்றியுணர்வுடன் எதையும் எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காகக் கழகத்தை ஆதரிப்பவர்கள் நீங்கள்.
இப்படிப்பட்ட தொண்டர்கள் இல்லாத எதிர்க்கட்சிகளால் இந்த உணர்வை, உறவை எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது! நான் உறுதியாகச் சொல்கிறேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்தப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் உங்களை மீண்டும் சந்திப்பேன். ஆப்லைன், ஆன்லைன், இரண்டிலும் திமுக-தான் ‘லயன்’ என்று காட்டுவோம்! வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் கூறினார்.
