சென்னை: சென்னை அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘‘25,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர் தொழில் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
கணினி வழி திறனறிவு தேர்வு நடத்தி பள்ளிகளில் மாணவர்களை கண்டறிந்து திறன் மேம்படுத்தி வருகிறோம். குறைந்த கற்றல் திறன் கொண்ட 40% மாணவர்களை திறன் மேம்படுத்தி உள்ளோம்’’ என்றார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘சட்டமன்ற இறுதி நாள் அல்ல, நிறைவான நாளாக பார்க்கிறோம்.
அனைத்து உறுப்பினர்களும் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் முறையாக பதில் அளித்தனர். கலைஞர் மீது மரியாதை வைத்திருந்தவர் கேப்டன். தேமுதிக கூட்டணி முன்கூட்டியே நடைபெறவேண்டியது தாமதமாக நடந்தாலும் மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் எங்களை என்ன வெற்றி கூட்டணி எனவா பாராட்டப் போகிறார்கள். அனைத்து கூட்டணிகளுக்கும் விமர்சனம் வரத்தான் செய்யும்’’ என்றார்.
