×

3 மாத இடைவெளிவிட்டு கைவரிசை ஜவுளி அதிபர் வீட்டில் கார் திருட்டு

ஈரோடு, பிப்.5:ஈரோடு சூளை வசந்தம் நகரை சேர்ந்தவர் பாலமுரளி (53). ஜவுளி அதிபர். இவரது வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். அதன்பின், போலீசார் கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்டனர். இந்நிலையில், பாலமுரளி நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் காரில் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அவரது காரை வீட்டின் போர்டிகோவில் நிறுத்தி காம்பவுன்ட் கதவை பூட்டி விட்டு தூங்க சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது கார் திருட்டு போயிருந்தது. காம்பவுண்ட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பாலமுரளி ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் பாலமுரளி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு 12 மணியளவில் காரில் வந்த மர்ம நபர்கள் பாலமுரளி வீட்டினை நோட்டமிடுவதும், பின்னர், நள்ளிரவு 1.30 மணியளவில் போர்டிகோ கதவை உடைத்து காரை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து, வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒரே வீட்டில் 3 மாத இடைவெளியில் 2வது முறையாக திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Car theft ,home ,handloom textile tycoon ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...