×

தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா கடந்த 2022ல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மதம் மாற பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக அப்போது தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை மற்றும் விஎச்பி அமைப்பினர் புகார் எழுப்பினர். ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இதுதொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் இதே உத்தரவை உறுதி செய்திருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அறிக்கைகள் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி கடந்த 2023ல் திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில், மாணவர் விடுதியின் கணக்கு விவரங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லி லாவண்யாவை பள்ளி நிர்வாகி சகாயமேரி கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதனால், படிப்பில் லாவண்யா பின்தங்கி உள்ளார். என்னால், முடியாது என்று லாவண்யா கூறியபோதும், தொடர்ந்து கணக்கு விவரங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவர் பூச்சிக்கொல்லி குடித்து தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், விஎச்பி உள்ளூர் தலைவர் முத்துவேல் மற்றும் பாஜ தலைவர்கள் லாவண்யாவிடம் பேசி வீடியோ எடுத்து, மதமாற்ற முயற்சியால்தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரப்பினர். பள்ளியில் மதமாற்ற முயற்சி நடக்கிறதா என்பதை கண்டறிய சிபிஐயால் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

குறிப்பாக கடந்த 2010 முதல் பள்ளியில் படித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் பலரது சான்றிதழ்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறும் போது மதம் மாறவில்லை என்பதும் தெரிகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாகவிரிவாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட லாவண்யா உட்பட வேறு எவரையும் அத்தகைய மதமாற்றத்திற்கு உட்படுத்தவும் இல்லை முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. மாணவி லாவண்யா இறந்த பின் அவருடைய தந்தை மற்றும் சித்தி ஆகியோர் விஷ்வ இந்து பரிஷத் தலைவரான முத்துவேல் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சில பா.ஜ.க தலைவர்களின் நிர்பந்தத்தால் இறந்த லாவண்யாவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thanjavur ,Michaelpatti ,CBI ,Supreme Court ,New Delhi ,Lavanya ,Ariyalur ,Michaelpatti Pure Heart Higher Secondary School ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...