- செயற்கை நுண்ணறிவு
- தில்லி
- கூகிள்
- மோடி
- ஸ்பெயின், பிரேசில்
- புது தில்லி
- தலைச்செயல் ஊராட்சி
- சுந்தர்பிசாய்
- உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம்
- பரத் மண்டபம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேரில் சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க மாநாடு நடந்து வருகிறது. வரும் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 30 சர்வதேச அமைப்புகள் மற்றும் 45 அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இந்த மாநாட்டின் மூலம், வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை 400 பில்லியன் டாலர் மதிப்பிலான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கூறுகையில், ‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது மிகப்பெரிய வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்கியுள்ளது’ எனத் தெரிவித்தார். முன்னதாக இந்தியா வந்த சுந்தர் பிச்சை, ‘மீண்டும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். வரும் 20ம் தேதி நடைபெறும் மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் மற்றும் 500 தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாதுகாப்பு பணிகளுக்காக 15,000 போலீசார் மற்றும் 4,000 அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தொழில்நுட்ப கண்காட்சியின் நேரம் இன்று முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
