* பாஜக விரிக்கும் பலமான தேர்தல் வலையில் சிக்கும் தலைவர்கள்
* பதவிக்கு மல்லுக்கட்டும் மூத்த நிர்வாகிகளால் கடும் நெருக்கடி
புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் விரைவில் அறிவிக்கபட உள்ள நிலையில், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் உட்கட்சி பூசலை தீர்க்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் தவித்து வருகிறது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பாஜக விரிக்கும் பலமான தேர்தல் வலையில் மூத்த தலைவர்கள் சிக்குவதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தல்களில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியும், கேரளாவில் இரண்டாவது முறையாக இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடித்தன. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. அசாமில் பாஜக தலைமையிலான கூட்டணியும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியும் வெற்றி பெற்றன. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியும், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடதுசாரி முன்னணியும் ஆட்சியில் உள்ளன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியும், அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சியும் நடைபெறுகின்றன. புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் ‘மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்’ என்று ஆளும் கட்சிகளும், ‘மாற்றத்தை உருவாக்குவோம்’ என்று எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மற்றும் வியூகங்களை வகுத்து வருகின்றன.
மேற்கண்ட 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே ஆளும் திமுக கூட்டணியில் உள்ளது. மற்றபடி மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் எதிர்கட்சி வரிசையில் உள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல்களால் பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதனை வாய்ப்பாக பாஜக பயன்படுத்திக் கொண்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான அதிகாரப் போட்டியால் பாஜக எளிதாக வெற்றி பெற்றது. இதேபோல் சட்டீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் மற்றும் சிங் தியோ ஆகியோருக்கு இடையிலான மோதல் தோல்விக்கு வித்திட்டது.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த அரியானா சட்டமன்றத் தேர்தலிலும் குமாரி செல்ஜா மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோரிடையே நிலவிய மோதலால் உறுதி செய்யப்பட்ட வெற்றியை காங்கிரஸ் இழந்தது.
தொடர்ந்து டெல்லி மற்றும் பீகார் மாநிலத் தேர்தல்களில் சந்தித்த படுதோல்விகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தற்போது வெற்றிக்காக ஏங்கித் தவிக்கிறது. வரும் 2029ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இந்தாண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவது அக்கட்சிக்கு அவசியமாகிறது. தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரசின் உட்கட்சி விவகாரங்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், வரவிருக்கும் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சிக்கலை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் ‘எதிர்கால ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்று வலியுறுத்துவது கூட்டணியை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அவர்கள் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச முடியும் என்று கூட்டணி தரப்பில் கூறப்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும் தமிழகத்தில் பாஜகவை விட காங்கிரஸ் அதிக செல்வாக்குடன் இருப்பதாகவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் 5 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ், பின்னர் படிப்படியாக உயர்ந்து 2021ம் ஆண்டில் 18 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வி.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது அக்கட்சிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. அப்போது நமச்சிவாயம் மற்றும் ஜான் குமார் உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தது பெரும் அரசியல் மாற்றத்தை உண்டாக்கியது. இந்த உட்கட்சி மோதல்கள் இப்போதும் நீடித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோருக்கு இடையே நிலவும் பனிப்போர் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், வேட்பாளர் தேர்வில் நிலவும் குளறுபடிகளைத் தீர்க்க மேலிடப் பார்வையாளர்கள் புதுச்சேரி விரைந்துள்ளனர். திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வரும் சூழலில், ‘திமுக தரப்பில் 50 சதவீத இடங்கள் அல்லது முதல்வர் பதவி’ கோரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் போராடி வரும் வேளையில், உட்கட்சி பூசல்களும் கூட்டணி நெருக்கடிகளும் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
மேற்குவங்கம்
கடந்த 2021ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அப்போது இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட 91 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் பூஜ்ஜியம் இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி பெரும் சரிவைச் சந்தித்தது. இந்தத் தோல்வியால் தொண்டர்கள் மத்தியில் பெரும் தொய்வு ஏற்பட்டதோடு கட்சியின் வாக்கு வங்கியும் 9.32 சதவீதம் வரை சரிந்தது. கடந்த காலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததே இத்தகைய பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். அதனால் மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதேநேரம் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பதிலாக சுபங்கர் சர்க்கார் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அல்லது இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் தனித்து நிற்பது பெரும் அரசியல் சூதாட்டமாகவே பார்க்கப்படுகிறது.
கேரளா
கேரள மாநிலத்தில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 38 சதவீதம் வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் கிடைத்த இந்த வெற்றி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கையில் உள்ளனர். அங்கு ஆளும் கட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தில் காங்கிரசின் பலத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல்வர் நாற்காலிக்கு மூத்த தலைவர்கள் சசி தரூர் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது இதனைத் தவிர்க்க ரமேஷ் சென்னிதலாவை தேர்தல் பிரசாரக் குழு தலைவராகவும், சசி தரூரை அதன் துணைத் தலைவராகவும் கட்சி மேலிடம் நியமித்துள்ளது. மேலும் ‘தேர்தலில் குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்தாமல் கூட்டுத் தலைமையின் கீழ் வாக்கு கேட்கப்போகிறோம்’ என்று கட்சி மேலிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அதேநேரம் சசி தரூர் சமீப காலங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசியதாகக் கிளம்பிய சர்ச்சைகளுக்கு பின்னர், தற்போது அவர் ராகுல் காந்திக்கு அளித்து வரும் ஆதரவால் உட்கட்சி மோதல்கள் குறைந்துள்ளன.
அசாம்
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பூபேன் போரா தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அவருக்குப் பின் தலைவராக நியமிக்கப்பட்ட கவுரவ் கோகோய் மீது பூபேன் போரா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பூபேன் போராவை ஆளும் பாஜக தனது பக்கம் இழுக்க முயற்சி செய்த நிலையில் ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். ஆனால் ராகுலின் முயற்சி பலிக்கவில்லை. பூபேன் போராவை தங்கள் பக்கம் பாஜக இழுத்து போட்டுக் கொண்டது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர், வெவ்வெறு கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்தில் தாவி வருகின்றனர். வருகிற தேர்தலில் அசாமில் காங்கிரஸ் வசம் உள்ள 29 இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதே தற்போதைய நிலையில் அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மேற்கண்ட 5 மாநிலங்களில் காங்கிரசின் நிலைமையை பார்க்கும் போது, ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால், அதன் உட்கட்சிப் பூசல்களை முதலில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ‘உட்கட்சி மோதல்களைக் களைந்து கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாகச் செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி சாத்தியமாகும்’ என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி, கட்சியின் தலைவரான கார்கே போன்ற தலைவர்கள் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் நீடிக்கும் உட்கட்சி குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் தனது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டால் மட்டுமே 5 மாநில தேர்தல் வெற்றிகள் சாத்தியமாகும்.
