திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில அரசு சார்பில் கருத்தரங்கம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், ‘‘கேரளாவில் பினராயி விஜயன் உறுதியாக மீண்டும் முதல்வராக வருவார்’’ என்றார். இது காங்கிரஸ் கட்சியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணிக்கு (எல்டிஎப்) கடும் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) இருக்கும் நிலையில் மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், இது குறித்து மணி சங்கர் அய்யர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒரு காங்கிரஸ்காரராக யுடிஎப் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் காந்தியவாதியாக உண்மையை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதன்படி, கேரளாவில் பினராயி விஜய் தலைமையிலான எல்டிஎப் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். எனது பேச்சில் இதைப் பற்றி வெறும் அரை வரி மட்டுமே கூறினேன். அது மிகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் எல்டிஎப் அரசு சிறந்த பணிகளை செய்து வருவதை மறுக்க முடியாது’’ என்றார்.
* தனிப்பட்ட கருத்து
காங்கிரசின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே மணி சங்கர் அய்யருக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அவர் பேசுகிறார், எழுதுகிறார். அவர் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து’’ என்றார்.
