×

திருச்சி லால்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 

திருச்சி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி நகராட்சியில் 31.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக 4.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இலால்குடி நகராட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். முதலமைச்சர் இலால்குடி பேரூராட்சியை 2021 ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தினார்கள். இலால்குடி நகராட்சி மூலம் 45.796 கி.மீ நீளமுள்ள சாலைகள் மற்றும் 17.367 கி.மீ மழைநீர் வடிகால்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அருகில் 4.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7000 சதுரடி

தற்போது இலால்குடியில் உள்ள பேருந்து நிலையம் மிகவும் பழமையானதாகவும், மிகச் சிறிய அளவிலும் உள்ளதால் தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்றவாறு பூவாளுர் சாலையில் 5.32 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 31.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 120 கடைகள், 2 உணவகங்கள், 2 ஏ.டி.எம் கள், ஓட்டுநர் ஓய்வு அறை, இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; இன்று இந்த லால்குடி நகரத்தில் சுமார் 36.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தையும், நகராட்சி அலுவலகத்தையும் உங்கள் முன்னிலையில் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகரத்திற்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் ஊர் எது என்று கேட்டால், அது நிச்சயமாக இந்த லால்குடிதான். இன்னும் சொல்லப்போனால், தமிழ் சமூகத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த கல்லக்குடி, இந்த லால்குடித் தொகுதியில்தான் இருக்கிறது என்பது கூடுதல் பெருமை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு மூன்று அமைச்சர்களைத் தந்த பெருமைக்குரிய ஊர் இந்த லால்குடி. பேரறிஞர் அண்ணாவுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் மிக நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களைத் தந்த ஊர் இந்த லால்குடி. அதேபோல, இப்போது இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சருக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய ஓர் அமைச்சர் என்றால், அது நம்முடைய அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்தான். அவரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். அன்பிலார் அவர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரும், எனக்குப் பக்கபலமாக இருக்கக்கூடியவருமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரும் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது.

இன்று நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை என இரண்டு முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களைத் தந்திருப்பதும் இந்த லால்குடித் தொகுதிதான். அண்ணன் நேரு அவர்களாக இருந்தாலும் சரி, நண்பர் அன்பில் மகேஷ் அவர்களாக இருந்தாலும் சரி, இரண்டு அமைச்சர்களுமே இன்று திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை இந்தப் பகுதிக்கு முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லிச் செயல்படுத்தி வருகிறார்கள். அதேபோல், உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சௌந்தரபாண்டியன் அவர்களும் இந்தப் பகுதிக்காகத் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து வருகிறார்.

இந்த லால்குடி நகரைப் பொறுத்தவரை, ஓர் அதிநவீன புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்தது. திருச்சி பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து நிலையத்தைக் கட்டிய நேரு, அவரின் ஊருக்குப் பேருந்து நிலையம் கட்டாமல் விட்டுவிடுவாரா? அல்லது நீங்கள்தான் விட்டுவிடுவீர்களா? அதனால்தான் முதலமைச்சரிடம் கேட்டு நிதியைப் பெற்று, இன்று இந்த பேருந்து நிலையத்தை மிகச் சிறப்பாக இங்கு கொண்டு வந்திருக்கிறார். பேருந்து நிலையம் மட்டுமல்லாமல், நகராட்சி அலுவலகத்திற்கும் புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். லால்குடியில் ஏற்கனவே இருந்த பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் மட்டும்தான் நிற்கும்.

குறிப்பாக, லால்குடியில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் மிகுந்த இடநெருக்கடி இருந்தது. இன்று அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில், இந்தப் புதிய பேருந்து நிலையத்தை நாம் இன்று திறந்து வைத்துள்ளோம். லால்குடியில் மட்டுமல்ல, இன்று தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டு வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு மக்கள் நலத் திட்டத்தையும் நம்முடைய முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள். மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்.

இவை அனைத்திற்கும் மேலாக இன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிற திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்தத் திட்டத்தில் இன்று ஒவ்வொரு மாதமும் நம்முடைய முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி வந்தார்கள். இந்தத் திட்டத்தை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் சூழ்ச்சி செய்தார்கள். அதற்கு நம்முடைய முதலமைச்சர், “நான் கொடுக்கிற 1,000 ரூபாயை நீ நிறுத்த முயற்சி செய்கிறாயா? என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு 5,000 ரூபாய் கொடுக்கிறேன்” என்று கூறி, இந்த மாதம் ஒவ்வொரு மகளிருக்கும் 5,000 ரூபாய் வழங்கியுள்ளார்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்குச் சேர்த்து 3,000 ரூபாயும், கோடைக்காலச் சிறப்புத் தொகையாக 2,000 ரூபாயும் என மொத்தம் 5,000 ரூபாயை இரண்டு நாட்களுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், மீண்டும் நம்முடைய கழக ஆட்சி அமைந்தவுடன், மகளிருக்கான உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து உயர்த்தி 2,000 ரூபாயாக மாதந்தோறும் வழங்குவேன் என்ற வாக்குறுதியையும் கொடுத்துள்ளார். நம்முடைய முதலமைச்சர் சொன்னால் நிச்சயம் செய்து காட்டுவார் என்கிற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறது. இன்று தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மகளிர் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் இன்று பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டம் மட்டுமல்லாமல், லால்குடிக்குப் பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லால்குடி அரசு மருத்துவமனைக்கு 12 அறைகள் கொண்ட புதிய கட்டடம், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லால்குடி வட்டாட்சியர் அலுவலகம்,

கால்நடைத் துறை சார்பாகச் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள். சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லால்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம்.
4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள். தொகுதி முழுவதும் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கூடங்களுக்குப் பல்வேறு கட்டடங்கள். இப்படிப் பல திட்டங்களை இந்தப் பகுதிக்கு நம்முடைய அரசு வழங்கியுள்ளது. இந்த லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசுக்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருந்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் புதிய பேருந்து நிலையத்தை இங்கு வந்துள்ள மக்கள் மற்றும் இப்பகுதி மக்கள் சிறப்பாகப் பயன்படுத்துங்கள். இதனைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க நகராட்சிக்குப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல, புதிய கட்டடத்தில் செயல்பட இருக்கின்ற லால்குடி நகராட்சியின் பணிகள் சிறக்கட்டும் என்று கூறி, இந்தச் சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர் நேரு அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் சல்மா, அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, நகர் மன்ற தலைவர் துரை மாணிக்கம் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Lalgudi, Trichy ,Lalgudi Municipality, Tiruchirappalli district ,
× RELATED உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542.02 கோடி...