விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் கைது போலீசாரை கண்டித்து காவல்நிலையம் முற்றுகை நீதிமன்றம் முன்பு மறியலால் பரபரப்பு

மதுரை, பிப். 5: மதுரை திருப்பாலையில் கடந்த 10ம் தேதி பாஜவினர் பொங்கல் விழா நடத்தினர். அப்போது திருப்பாலை பள்ளிவாசல் பகுதியில் ஊர்வலம் சென்றபோது, ரகளை ஏற்பட்டது. இதுதொடர்பாக பலரை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், அன்று மாலை, மேலமடையில் உள்ள பாஜ அலுவலகம் மர்ம கும்பலால் சூறையாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரிடம் அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அக்கட்சி சார்பில், மாநகர் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.  இதற்கிடையே, கடந்த ஜன.18 மற்றும் 20ம் தேதி இஸ்லாமிய இளைஞர்கள் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் உறவினர்கள் அண்ணாநகர் காவல்நிலையத்தை அன்றிரவு முற்றுகையிட்டனர். இதனால், போலீசார் அவர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு விடுவித்தனர்.

 இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் புதுராமநாதபுரம் ரோடு, தமிழன் தெருவை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (21) என்பவரை நேற்று காலை 9 மணியளவில், அண்ணாநகர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார், மாலையில் சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த 50 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை அண்ணாநகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அங்கிருந்து நடந்து வந்து, மாவட்ட நீதிமன்றம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்தனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>