×

தமிழ்நாட்டில் சுமார் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (16.02.2026) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமான NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர், மின் உபகரணங்கள், மோட்டார்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும்; ஏக்வஸ் (Aequs) குழுமம் 4,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட்- சூளகிரி தொழிற் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில், முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. மாநிலத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை மேன்மேலும் மேம்படுத்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், பல்வகை செயல்பாடுகளைக்கொண்ட செமிகண்டக்டர்கள் உயர் மதிப்பு கொண்ட IGBTகள், (Insulated-gate bipolar transistor) ICகள் (Integrated Circuits) போன்றவற்றிற்கான முழுமையான உற்பத்தி அமைப்பை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையம் அமைக்கவும் முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக, உயர் திறன் மிக்க பணியாட்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஏக்வஸ் (Aequs) குழுமம்
ஏக்வஸ் (Aequs) குழுமம், 4,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7,000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், SIPCOT-சூளகிரி தொழிற்பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உற்பத்தித் தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரம் மற்றும் கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கவும் முன்மொழிந்துள்ளது. இத்தொழிற்பூங்காவில் விமான இயந்திர உபபாகங்கள் மற்றும் துல்லிய பொறியியல் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 5980 கோடி ரூபாய் முதலீட்டில் 8400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிகளில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மினிபியா மிட்சுமியின் இயக்குநர் & தலைவர், கட்சுஹிகோ யோஷிடா, வணிக அதிகாரி மட்சுடா டாய்சுகே, ஆலோசனைஅதிகாரி ஷிஷிடோ ஷோஜி, NMB மினிபியா இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் யமசாகி யோஹி, குழுத் தலைவர் கியோஹரா மோகா மற்றும் மேலாளர் தமிழ் செல்வன், மற்றும் ஏக்வஸ் (Aequs) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் கவுல், இகஸ் SEZ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷ்யாம் கல்யாண், மேலாண்மை இயக்குநர் விக்ரம் அன்னப்பா, தலைமை நிதி அதிகாரி தினேஷ், பொது மேலாளர் பாலமுருகன் சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Gaul ,Chennai ,Chief Minister ,K. ,Stalin ,General Secretariat ,NMB Minibia India Private ,Minibia Mitsumi ,Japan ,
× RELATED கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்...