×

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது: எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.2.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் பழம்பெரும் நடிகை எம் என் ராஜம்-க்கு 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும், மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுனுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும் வழங்கி சிறப்பித்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றும்,  தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, 2022-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது திரைப்படத் துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை,  வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸ்-க்கு 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும்; முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக 2023ஆம் ஆண்டுக்கு மட்டும் கூடுதலாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலா-க்கு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்-க்கு 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949இல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். 1950கள் மற்றும் 1960களில் முன்னணி நாயகியாக விளங்கினார். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்-க்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.

முதுபெரும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவராவார். 1960-இல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது திரைத்துறை பணியை தொடங்கி, பின்னர் 1970கள் முதல் 1990கள் வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குநராக உயர்ந்தார். இவர் 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கி மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் அவருக்கு 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெற்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்கு விருதுடன் ரொக்கப் பரிசாக தலா ரூ.10 இலட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெற்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரது குடும்பத்தினர் விருதுகள் வழங்கி சிறப்பித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், எம்.என்.ராஜம் மற்றும் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : M. N. Rajam ,S. B. Muduraman ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,M N Rajam ,Tamil Development and ,Media Department ,General Secretariat ,Senior Film Director ,
× RELATED கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்...