புதுச்சேரி, பிப். 16: காரைக்காலில் உள்ள மீன்பிடி துறைமுகம் கடந்த 2012ம் ஆண்டு ரூ.47.74 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த துறைமுகத்தை `ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நீடித்த மற்றும் பொறுப்பார்ந்த மீன்வள வளர்ச்சியினை நீலபுரட்சியின் மூலம் கொண்டு வருவதற்கு ரூ.130.17 கோடி மதிப்பிலான முன்மொழிவை மத்திய அரசு ஏற்றது. இதையடுத்து கடந்த டிச.10ம் தேதி காரைக்கால் மீன்பிடித்துறைமுக பகுதியில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுக அபிவிருத்திட்டமானது அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கந்தசாமி என்பவர் மனு தாக்கல் செய்தார். இதில், துறைமுகத்தின் திறன் முன்பு இருந்ததை விட பல மடங்கு அதிகம். அதனால் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை தொடர முடியாது. முழு புள்ளி விவரங்கள் திட்டத்தில் இல்லை. திட்டம் தொடர அனுமதிக்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை தாக்கல் செய்த எதிர்மனுவில், 2010ம் ஆண்டு வரை, துறைமுகத்தில் 80 முதல் 90 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளுக்கு மட்டுமே இடம் இருந்தது. ஆனால் இப்போது படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகத்தின் வளர்ச்சியில் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 250க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்த முடியும். புதுச்சேரி அரசு 18 மாதங்களுக்குள் திட்டத்தை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது என்று ெதரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்
நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுக அபிவிருத்தி திட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் இயக்குநரே அதற்கான ஒப்புதல் அளிக்கும் முன்மொழிவின் பரிசீலினையில் பங்கேற்றதால் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அளித்த அனுமதி தவறானது என மனுதாரர் குறிப்பிட்டத்தை ஏற்கிறோம். இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதியாக முடிவு எடுக்கும் வரை கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அளித்த அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வழக்கு வரும் ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
