கொடுங்கையூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு விடிவுகாலம் நவீன தொழில்நுட்பத்தில் மறுசுழற்சி பணி மும்முரம்: விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருந்து தினசரி அகற்றப்படும் குப்பை, கழிவுகள் லாரிகளில் ெகாண்டு செல்லப்பட்டு பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு ஆகியவற்றில் கொட்டப்படுகிறது.  இந்த கிடங்குகளில் பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருவால் மலைபோல் குவிந்துள்ளன. இதில், கொடுங்கையூர் குப்பை கிடங்கு 350 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 1 முதல் 8வது வார்டு வரை உள்ள பகுதிகளில் இருந்து தினசரி அகற்றப்படும் 2,300 முதல் 2,500 டன் வரையிலான குப்பை இந்த கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பையில் இருந்து இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எடுக்கும் சிலர், அவ்வப்போது குப்பையை தீவைத்து எரிப்பதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து, கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி கொசு உற்பத்தி அதிகரித்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு படையெடுப்பதால், பொதுமக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த குப்பை கிடங்கை மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது குப்பையை கையாள்வதில் புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் பெரம்பூர் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில்  கொடுங்கையூர் குப்பை குடங்கு பிரச்னை சரி செய்யப்படும் என கண்டிப்பாக இருக்கும். அந்த அளவிற்கு கொடுங்கையூர் குப்பை கிடங்கு பிரச்னை காலங்காலமாக இருந்து வருகிறது.  இந்நிலையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உள்ள அழிக்க முடியாத அல்லது மறுசுழற்சி செய்ய முடியாத குப்பையை எரிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி மணலியில் உள்ள மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை எரிக்கும் தொழில்நுட்பம் மூலம்,  கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் அமைக்க உள்ளனர்.

 இதில் ஒரு நாளைக்கு 50 முதல் 80 டன் வரை குப்பையை எரிக்க முடியும். இதன்மூலம், மலைபோல் குவிந்துள்ள மறுசுழற்சி செய்ய முடியாத குப்பை கழிவுகளுக்கு விடிவு காலம் பிறக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதேபோல், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உள்ள கட்டிட கழிவுகளை  நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆலோ பிளாக் கற்கள் மற்றும் டைல்ஸ் செய்வதற்காக தனியாக வேலைகள் நடந்து வருகின்றன. மேலும், மரக்கழிவுகளை பவுடராக்கி அதை விற்பனை செய்யும் பணிகளும் இன்னும் சில மாதங்களில் செயல்பட உள்ளன இந்த 3 பணிகளும் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து செயல்பாட்டிற்கு வந்தால், கொடுங்கையூர் குப்பை கிடங்கின் தோற்றம் நிச்சயமாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>